டியூக் ஜெயராஜ்

ஆழ்மனத் தேடல் (The Search)
“என் உள்ளத்திலே ஒரு வெற்றிடம்” என்பதாய் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் (Aishwariya Rai) பேசியிருக்கிறார். ஒருமுறை பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றினில் அவர் இவ்விதம் கூறினார், “உங்களுக்கு தெரியுமா? ஒரு உலக அழகியாக, இந்த உலகிற்கு நான் திடீரென்று பல வித புதிய அனுபவங்களோடு மிகப் பிரபலமாக அறிமுகமானேன். அந்த வருடம் முடிந்தவுடனே, ஒரு வெற்றிடம் என்னில் உருவானது.” (தி டைம்ஸ் ஆப் இந்தியா, 20 அக்டோபர் 1999). PLAYBOY எனும் ஆபாச பத்திரிகையின் நிறுவனர் ஹூக் ஹெப்னருடன் (Hugh Hefner) அப்பத்திரிகைக்காக பிளேபாய் மாளிகையில், பல உல்லாசத் தோழிகளுள் ஒருவராகவும், பாலுறவுக்காட்சி/ படுக்கையறை பங்காளியாகவும் ஏழு ஆண்டுகளாக இருந்த ஹாலி மேடிசன் (Holly Madison) என்பவர், PEOPLE எனும் பத்திரிகையிலே தன் அனுபவத்தை இப்படித்தான் ஒப்புக்கொண்டார். “இது ஒரு தொடர் போராட்டமாகவே இருந்தது. ‘இந்த வாழ்விலே எல்லாமே சிறப்பாகவே இருக்கிறது’ எனும் மாய பிம்பத்தை வெளியிலே ஏற்படுத்தினேன். ஆனால் மாறாக என் உள்ளத்திலோ வெந்து நொந்து பரிதாபமாகவே இருந்தேன்.” (MSN.COM, 12 மே 2016 பதிவு).
நீங்களும் இது போன்ற ஒரு வெற்றிடத்தை/வெறுமையை உங்கள் இதயத்திலே உணர்ந்திருக்கீறீர்களா? படுக்கையை பிய்த்துக் கொண்டு, புரண்டழுது, துயரத்தின் உச்சத்திற்கே சென்று, “இவ்வளவுதானா இந்த வாழ்க்கை?” எனும் இரக்கமில்லா கேள்வி கேட்ட உறக்கமில்லா இரவுகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் பாதங்கள் விண்ணைத் தொடும் வண்ணம் நீங்கள் நடக்கலாம். நீங்கள் எப்போதும் பூ போன்று பளீரென்ற புன்னகையை வெளிப்படுத்தலாம். உங்கள் கண்கள் பேரொளியில் பிரகாசமாக மின்னலாம். ஆனால், இவையனைத்தும் இருந்தும், ஏனோ உங்கள் இதயத்தின் அடியாழத்தில் வெறுமை எனும் இருள் சூழ்ந்தவராய் கூட நீங்கள் இருக்கலாம்.
ஹிந்தி படவுலகின் (பாலிவுட்) பிரபல கதாநாயகி மனிஷா கொய்ராலா (Manisha Koirala) இக்கருத்தை ஆமோதிக்கும் வண்ணம் சொன்னது என்னவெனில்: “வாழ்க்கையை கேள்வி கேட்கத் துவங்கினேன். காலையில் எழுவது, அலங்காரம் செய்வது, படப்பிடிப்புக்கு பறப்பது, அலுத்துக் களைத்து வீடு திரும்புவது, இந்த ஓயாத ஓட்டம் எனக்கு கேள்விக் குறியாகவே இருக்கிறது . . .” (OPEN, 9 July 2017). வெறுமனே வளர்வது, கல்வி கற்பது, வேலை பார்ப்பது, கல்யாணம் முடிப்பது, அப்பா ஆவது, தாத்தாவாகி பின் தலை சாய்ப்பது, இது மட்டுமல்ல வாழ்க்கை. “இதற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது” என்கிற ஓர் உலகளாவிய சிந்தனை உண்டு. ஒட்டு மொத்த மனித குலமும் இந்த ‘அதையும் தாண்டி புனிதமான. . .’ என்கிற ஒன்றினைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
நீங்களும் வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம், மற்றும் மகிழ்ச்சியினை உண்மையாய் தேடுகிறவராயின், திருமறையின் கடவுள் சொல்லும் உங்களுக்கான வாக்குறுதி இதோ: “இங்கே நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப் பிடிக்கலாம். நீங்கள் என்னைக் கண்டுப் பிடிக்க அனுமதிப்பேன்” (எரேமியா 29:13-14, திருமறை, Tamil ERV).
ஆச்சரியமான செய்தி (The Surprise)
1950-‘60 காலங்களில் வசந்தமாக வலம் வந்த நடிகைசாவித்ரியின் வாழ்க்கையை, “கீர்த்தி சுரேஷ்” நடிப்பில் “நடிகையர் திலகம்” என்ற பெயரில் 2018-ம் ஆண்டின் ஆரம்ப கால கட்டத்தில் வெளியிட்டனர். அப்படத்தில், “இன்னும் என்ன எஞ்சும்” எனும் பாடலின் சில வரிகளை இங்கே பார்ப்போம்:
“மலரும் பொழுதும் ஒரு போராட்டம்!
(அறியா வயதினிலே தவறவிட்ட தந்தையினாலே)
உதிரும் பொழுதும் ஒரு போராட்டம்!!
(காதல் கணவரால் வஞ்சிக்கப்பட்டு மதுவிற்கு அடிமையானதினாலே)
நடுவில் நடுவில் சிறு கொண்டாட்டம்!
(நான் திரையுலக பிரபலமானதினாலே, நான் குளிர்காய வேண்டுமென்றால் சந்தன மரத்தை கூட சரித்துப்போடும் அளவுக்கு பாசம் கொண்ட மக்கள் கூட்டம்)
முடிவில், முடிவில் வெறும் ஏமாற்றம்!!
(அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்றதினாலே)
இத்திரைப்படத்தின் ஒரு பகுதியிலே, சாவித்திரி தன்னுடைய காதல் கணவனாகிய ஜெமினி கணேசன் (துல்கர் சல்மான் என்பவர் ஜெமினி கணேசனாக நடித்திருந்தார்), காம வேட்கையை கட்டுப்படுத்தத் தவறி மற்றொருத்திக்கு கட்டிலிலே தூண்டில் போட்ட வேளையில் கையும் களவுமாய் பிடிபட்ட பொழுது பனிமலையையும் பிழம்பாக்கும்படி பேசிய கதை வசனமாவது: “உனக்கு வெட்கம் இல்ல, எனக்கு புத்தி இல்ல. எத்தனை பேரு சொல்லியும் நான் கேட்கல. அலமேலு அக்கா (முதல்மனைவி), புஷ்பவல்லி (ஆசைநாயகி) இவங்க கூடயெல்லாம் நீ வாழ்ந்தப்ப தீராத உன் காமப்பசி, என்னை காதலிச்சு என் கூட வாழும் போது தீர்ந்து போயிரும்னு நினச்சது என் முட்டாள்தனம். நான் தான் புத்தி கெட்டவ…” இந்த வாசகம் குறிப்பாக திருமறையிலுள்ள பிரசங்கி புத்தகத்திலும் மற்றும் யோவான் சுவிசேஷ புத்தகம் 4-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பல-ஆண்கள்-உறவில்/ பல ஆண்களுடன் திளைத்திருந்த சமாரியா பெண்ணுடனான இயேசு கிறிஸ்துவின் உரையாடலிலும் உணர்த்தப்பட்டுள்ள நான் பயின்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.
YouTube-ல் பதிவேற்றப்பட்ட ‘இன்னும் என்ன எஞ்சும்’ பாடலை பற்றிய கருத்து பதிவுகளில் “உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இது பொருந்தும்” என்றொரு கருத்தும் குறிப்பிடபட்டிருந்தது (Abhisek Vaidya என்ற யாரோ ஒருவர் JUNE 2018 முதல் வாரத்தில் இட்டுச் சென்ற பதிவு). இப்படத்தில், சாவித்ரியின் நிம்மதிக்கான தேடல், அவர் ஒருவரின் தனிப்பட்ட தேடல் மட்டுமல்ல! நாம் அனைவரும் நம்முடைய இதயத்தின் செழுமையான வெறுமை காரணமாக தேடிக்கொண்டிருப்பதும் இந்த நிம்மதியைத்தான்.
முதலில் “நம்முடைய உள்ளத்தை வெறுமை ஏன் ஆட்கொண்டிருக்கிறது?” என்று திருமறை தெளிவுபடுத்துகிறது. இதற்கான காரணங்கள் அத்திரு மறையின்படி இரண்டு: பாவமும், பிசாசும் தான். உண்மையான மற்றும் நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய இறைவனை தவிர்த்து அவ்வெற்றிடத்தை நாம் வேறு எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாது (பிரசங்கி 2:25, திருமறை). “சூரியனுக்கு மேலே உள்ள இறைவனோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளாதவரை, சூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கை பயனற்றதும், வீணானதுமாகும்”. (இவ்விதம் தான் Selwyn Hughes என்பவர் 66-புத்தகங்களை உள்ளடக்கிய திருமறை எனும் நூலகத்திலுள்ள பிரசங்கியின் புத்தகத்தை பிழிந்து சாறாக்கிக் கொடுக்கிறார்). Pascal என்பவர் இதை மிக துல்லியமாக இவ்விதம் குறிப்பிடுகின்றார்: “இறைவன் வடிவிலான வெற்றிடமே நம்மிதயத்தில் உள்ளது, அதை அவர் மாத்திரமே நிரப்ப முடியும்!”. (இது சாவித்திரியும் மற்றும் ஒவ்வொரு தனி நபரும் அனுபவித்த அதே வெற்றிடம் தான்). இவ்விதமான [இறைவடிவிலான] வெற்றிடம் நம்மிடம் உட்புகுந்ததற்குக் காரணம் நம்முடைய பாவமே என்று திருமறை விளக்குகின்றது (ஏசாயா 57:20,21, திருமறை). உண்மையாகவே பாவம் மனித இதயத்திற்கும் மற்றும் ஆன்மாவிற்கும் என்ன செய்துவிடமுடியும் என்பதே இது: “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்! எனது உள்மனம் கலங்குகிறது! எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினது போல் உள்ளது! என்னுடைய கசப்பான அனுபவங்களின் காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது” (புலம்பல் 1:20, திருமறை, Tamil ERV). திருமறை ஆணித்தரமாகக் கூறுவது என்னவெனில் பாவத்தின் விளைவாகவே இவ்வெற்றிடம் உருவான தென்பதே.
இறைப்படைப்பில், சாத்தான் என்பவன் உலக தோற்றத்திக்கு முந்தைய காலங்கள் ஒன்றினிலே இறைவனின் சந்நிதானத்தில் நின்றிருந்த/இடம்பெயர்ந்த இறைத்தூதன் ஆவான். ஆனால், அவன் பெருமை எனும் பாவத்தில் விழுந்தான் (எசேக். 28:12-17; ஏசா. 14:13-15, திருமறை). இறைவனும் அவனது சுயவிருப்பதை நிரந்தரமாக்கிட, நரகத்திலே அவனைத் தள்ளும்படி தீர்மானித்தார். நரகம் என்பது பிசாசுக்காகவும் அவனை பின்பற்ற தீர்மானிக்கும் மற்ற தூதர்களுக்காகவுமே/அனைவர்களுக்காவுமே படைக்கப்பட்டது என்று திருமறை பறைசாற்றுகிறது (மத். 25:41, திருமறை). அந்த பிசாசுதான் உலகத்தில் உள்ளவரிடையே முடிவற்ற அமைதியின்மையையும் உள்ளத்திலே ஓர் வெற்றிடத்தையும்/கலக்கத்தையும் கொண்டு வருகிறான். உலகத்தின் முதல் பாவியாக இருப்பதோடல்லாமல் நம்மையும் பாவியாக்க பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் இளைப்பாற இடம் தேடி அலைகிறான் என்று திருமறையில் இயேசு சுட்டிக்காட்டுகிறார் (மத் 12:43, திருமறை). அமைதியின்றி அலையும் அந்த பிசாசு, உங்களது உள்ளத்திலும் ஒரு அமைதியின்மையையும், ஒரு வெறுமையையும் கொண்டு வருவான். வந்தவனை நாம் வரவேற்று உள்ளே வைத்து உபசரிப்பு செய்தால், நம்மை நாமே நாசப்படுத்திக் கொள்ளும் பழக்க வழக்கங்களாகிய புகைபிடிப்பது, மது அருந்துவது, கஞ்சா இழுப்பது, ஆபாச படம் பார்ப்பது, தகாத உடலுறவு கொள்வது, ஆத்திரப்பட்டுப் பழிவாங்க துடிப்பது, அவதூறு அடைவது போன்ற எண்ணற்ற காரியங்களுக்கு நம்மை அடிமையாக்குவான் (மாற்கு 5:5, திருமறை). பாவம் செய்ய பிரியப்பட்டு அவனுக்கு ஒத்துழைக்கும் யாரையும் அவன் இப்படி அடிமையாக்குவான். நாம் நம் பிழையை உணர்ந்து / மனம் வருந்தி கிறிஸ்துவினிடத்தில் திரும்பாவிட்டால், நாம் வாழும் வாழ்க்கையை நரகமாக்கி அதனை தொடர்ந்து வாழ்க்கையே நரகத்தில்தான் எனும் நிலைக்கு நம்மை எடுத்து சென்றுவிடுவான். பிசாசு என்றென்றும் நிரந்தரமாய் இருக்கப் போகின்ற இடமாகிய, இயேசு நரகம் என்றழைத்த, அக்கினியும் கந்தகமும் நிறைந்த இடமும், புழு சாகாமல் உணர்வு-ஒருநாளும்-நீங்கா நிலையிலே அங்கே இருக்கும் மனித வர்க்கத்தினரை விருந்தாக்கிக் கொள்ளப்போகின்ற இடமுமாகிய அந்நரகத்திலே நம்மைக் கொண்டு போய் சேர்ப்பதையே சாத்தான் தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான் என திருமறையும் நம்மை எச்சரிக்கிறது (மாற்கு 9:48; யோவான் 8:34; வெளி. 21:8, திருமறை).
நாம் நரகத்திற்கு செல்வதற்காக படைக்கப் படவில்லை (யோவான் 3:17, திருமறை). நாம் இறைவனோடு ஐக்கியம் கொள்ளும்படியாக படைக்கப்பட்டது மட்டுமின்றி, அவரோடு அனுதினமும், ஆழமும் உயிரோட்டமுமான உறவிலிருக்கும்படிக்குமே படைக்கப்பட்டிருக்கிறோம். அது ஒன்று மாத்திரமே நமக்கு பரிபூரண ஆனந்தத்தையும், விவரிக்க முடியாத பேரின்பத்தையும், நித்திய மகிழ்ச்சியையும் தரும் (சங். 16:11; I பேதுரு 1:8). நம் ஒவ்வொருவரையும் இந்த உலக தோற்றத்திற்கு முன்பே, நம் தாயின் கருவில் உருவாகும் முன்னரே இறைவன் தெரிந்து கொண்டார் (எபே. 1:4, திருமறை). ஆம், உலகத்தை படைத்த ஆண்டவர், உலகத்தை உண்டாக்குவதற்கு முன்பாகவே உன்னையும் என்னையும் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார். நம்முடைய ஆரம்பம் அவரது எண்ணத்திலே ஆரம்பமானது. அவர் நிர்ணயித்த நேரத்திலே நம்முடைய தந்தையும் தாயும் ஒன்றாய் இணைந்தபிறகு அவர் தீர்மானித்த நேரத்திலே நம்மை நம்முடைய தாயின் கருவிலே அனுப்பினார்.
அர்ப்பணிப்பின் மாண்பு (The Surrender)
இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதை எளிமையாய் புரிந்துகொள்வதற்கு உதவியாக உண்மையான மற்றும் இந்தியர்களால் மறக்கவியலாததுமான மட்டைப்பந்து விளையாட்டின் (கிரிக்கெட்) சம்பவம் ஒன்றினை இங்கே பார்ப்போம். 2 ஏப்ரல் 2011-ல் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்த மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அது. திலகரத்னே தில்ஷான் வீசிய சுழல் பந்தை தடுத்தாட திணறிப்போய் அவரிடமே தூக்கிக் கொடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கரும் ஏற்கனவே ஆட்டமிழந்து விட்டனர். 22 ஓவர் மட்டுமே முடிந்திருந்த நிலையில், இன்னும் 170 பந்துகளுக்கு 161 ரன் எடுக்க வேண்டிய இக்கட்டான சூழல். இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் தருவாயில், இது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கும் பதற்றமான சூழல். இந்த கடினமான சூழ்நிலையில், “இது என் முறை இல்லையெனினும், மட்டையை மட்டும் என்னிடம் கொடுங்கள், இப்பொழுது நான் களம் இறங்குகிறேன்” என எங்கிருந்தோ ஒலித்தது ஒரு நம்பிக்கைக்குரல். இந்தியாவின் மானத்தை காக்க மனு போட்ட ஒருகுரல் அவர்தான் நம் இந்தியாவின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எனும் ஆறடி திருக்குறள். பின் நிகழ்ந்தது சரித்திரம்.
இந்த பெரிய உலகம் ஒரு மாபெரும் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. நீங்களும் நானும் மற்றுமிருக்கிற யாவருடனும் சேர்ந்து நித்திய காலமாய் நெருப்பில் தகித்துக் கொண்டிருக்கிற நரகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறோம். “அன்புத் தந்தையே இறைவா, இந்த உலகத்தை காப்பாற்ற அதற்குள் நான் செல்கிறேன். என் நித்திய ஆவியை உருவப்படுத்திட எனக்கு ஒரு உடல் நல்கிட வேண்டும். நான் கன்னி மரியாளின் கருவறைக்குள் செல்கிறேன்.” கடந்த நித்திய காலங்களிலே தேதி குறிப்பிடும்படியான விண்ணகத்திலே நிகழ்ந்திருக்கக்கூடிய திட்டமிடும் கூடுகை ஒன்றினிலே நித்திய காலமாயிருக்கும் இயேசு கிறிஸ்து இப்படித்தான் சொன்னார். பின்னர், அக்கூட்டத்தில் தீர்மானித்ததை, சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன், இயேசு நிறைவேற்றினார். அவர் கன்னி மரியாளின் கருவறைக்குள் கருவானார். இவ்விதம் தான் முதல் கிறிஸ்து பிறப்பு (CHRISTMAS) என்ற ஒரு நிகழ்வு நடந்தேறியது. (இந்த பத்தி திருமறையில் உள்ள எபிரேயர் 10:5-8ல் காணப்படுகின்ற பகுதியைத் தழுவி என் எண்ணங்களால் வண்ணமாக்கப்பட்டது).
உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தனது சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற சிறப்பை இந்தியா தட்டிச் சென்றது. தன்னார்வமாக களத்தில் இறங்கி கப்பலை கரை சேர்த்த கேப்டன் தோனியின் தைரியமான இச்செயல் பாராட்டுக்குரியது. அவ்வண்ணமே, நரகத்திற்கு செல்லாமல் மீட்கப்பட்டு வாழ்வில் நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு எனக்கும் உனக்கும் கிடைத்த ஒரே வழி, இயேசுவின் தன்னார்வ தியாகச் செயலினால் கிடைத்ததே. இயேசு விண்ணிலிருந்து இறங்கி மண்ணிற்கு மனிதனாய் வந்த நிகழ்வே முதல் கிறிஸ்துமஸ். இந்த முதல் கிறிஸ்துமஸிற்கும், 2018-ல் திரைக்கு வந்த ஹிந்தி மொழி (பாலிவுட்) படமான பதாய் ஹோவிற்கும் (Badhaai Ho) ஏதேனும் தொடர்புண்டோ? இந்த படத்திலே 50 வயது மதிக்கத்தக்கதான பெண்ணொருத்தி ஓரிரவில் தன் கணவரின் கனிவான கவிதை வாசிப்பில் தன்னையே பறிகொடுத்து பாலுறவில் ஈடுபட்டதினாலே கர்ப்பவதியாவாள். ‘இதனால் அவளுடைய பிரியமான 25 வயது மதிக்கத்தக்க மகன் நகுலின் மனது கிழிக்கப்படும் (ஆயுஷ்மான் குரானா நகுலாக நடித்திருப்பார்). தன் பெற்றோர்கள் இப்படிச் செய்திருப்பார்கள் என அவனால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத நிலை’. (ராஜா சென், ஹிந்துஸ்தான் டைம்ஸ், 20 அக்டோபர் 2018 பதிவு). ஆனால் முதல் கிறிஸ்துமஸின் தனிச்சிறப்போ வேறு. அதன் சாராம்சமாவது: இயேசுவின் தாயாகிய மரியாள் தனது திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் பாலுறவு கொள்ளுவதற்கு முன்னதாகவே கர்ப்பமடைகிறார். ஆம், இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் அவதரித்தார். இந்த அகன்ற பெரும் முழு உலகத்தில் இதுவரை எவரும் பிறந்திராவண்ணம் இயேசு தனித் தன்மையுடன் பிரத்யேகமாக பிறந்தார்.
1986-ம் ஆண்டு செப்டம்பர் 5-ல், உள்ளத்தை உறையவைக்கும் ஒரு சம்பவம் அன்றைய உலகம் முழுக்க பேசப்பட்டது. செப்டம்பர் 7-ல் தன் பிறந்த நாளை கொண்டாடவேண்டிய, 22 வயதேயான, பயமரியாத, வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அழகு மங்கை நீர்ஜா பனோட் (Neerja Bhanot) என்பவர் தான், மும்பையிலிருந்து நியூயார்க் செல்லும், பான் ஆம் வானூர்தி 73-ன் (Pan Am Flight 73) விமான பணிப்பெண்கள் அனைவருக்கும் தலைமை கண்காணியாக (Chief Flight Attendant / Cabin Manager) பொறுப்பு வகித்தாள்.
நியூயார்க்கு செல்லும் இந்த விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் (Karachi) உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலும், பின்னர் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டிலும் (Frankfurt) நின்று செல்ல வேண்டியிருந்தது. சற்றேறக்குறைய அதிகாலை 4:30 மணியளவில் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்கியது. எரி பொருளை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட இடமே (Re-fueling Spot), எதிர்வினை சக்திகளை ஏற்றிக்கொள்வதற்கான இடமானதை (Terrorist-boarding Spot) என்னவென்று சொல்லுவது. அங்கே நடந்தது தான் என்ன? அதை நாம் கீழே காண்போம்.
பாலஸ்தீனியத்து தீவிரவாதிகள் நால்வர், விமான நிலைய பாதுகாப்புப்படையின் சீருடை அணிந்தவர்களாய் விமானத்தை நோக்கி ஆக்ரோஷமாக வந்தனர். கராச்சியில் கடைசி சில பயணிகள் ஏறிக்கொண்டிருந்த அதே நேரத்திலேதானே, திறக்கப்பட்டிருந்த விமானத்தின் வணிக வகுப்பு நுழைவாயிலை பயன்படுத்தி விமானத்திற்குள் புகுந்தனர். இயந்திர துப்பாக்கிகளுக்கொத்த துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் தங்களிடத்தில் வைத்திருந்தனர், அத்தீவிரவாதிகள்.
அடுத்த பதினேழு மணி நேரத்திற்கு, விமான நிலையத்திலேயே நின்ற அந்த விமானத்தை முழுமையாய் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது அந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகளே – “அதித்தீவிரமாய் தாக்கக் தயாராயிருந்த கட்டுமஸ்தான பயங்கரவாதிகள்” (ஒரு பத்திரிகையாளரான நீர்ஜாவின் தந்தை இச்சம்பவத்தைப் பற்றி பின்னாளில் இப்படித்தான் எழுதியிருப்பார்). இப்பயங்கர சூழலிலே தான் விமானத்திற்குள்ளிருந்த தலைமை அதிகாரியான நீர்ஜா, அமைதியாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டார்.
அதிகாலை முதலே துவங்கி நிகழ்ந்து கொண்டிருந்த இந்த விமான கடத்தல் நாடகமானது பதினேழு மணி நேரத்திற்கு நீண்டதினால் விமானத்தின் எரிப்பொருள் முற்றிலும் தீர்ந்து, மின்சாரம் தடைபட்டு, விமானத்திற்குள்ளிருந்தோர் முற்றிலுமாய் இருளிலே மூழ்கினர். இந்நிலையில், விமான நிலையத்திற்குள் இருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் இனி எந்த நொடியிலும் அவர்களை சுற்றி வளைத்து துவம்சம் செய்து விடுவார்கள் என்பதனை நன்கறிந்த தீவிரவாதிகள் திகிலடைந்தார்கள். அதனால் பதறிப்போன அவர்கள் பயணிகளை காட்டு மிராண்டித்தனமாக சுட ஆரம்பித்ததுமன்றி கைக்குண்டுகளையும் கண் மூடித்தனமாக வீசினர். அவர்களின் ஒரே திட்டம் – அது மிகவும் தெளிவாக இருந்தது – முடிந்த வரை பல பயணிகளைக் பலியாக்குவதே.
இச்சமயத்தில் தானே, நீர்ஜா என்ற அந்த பெண் அதிகாரி துரிதமாய் செயல்படத் துவங்கி, விமானத்தின் அவசர வாயிற்கதவுகளில் ஒன்றினைத் திறந்தாள். கதவினை திறந்த வேகத்திலே தானே முதல் நபராக காற்று நிரப்பப்பட்ட மெத்தை போன்ற சறுக்கல் (Chute) ஒன்றினிலே சறுக்கி விமானத்திலிருந்து தரை இறங்கியிருக்கக்கூடிய வாய்ப்பினை தவிர்த்தவளாய் மற்ற பயணிகள் தப்பி செல்வதற்கு வழி ஏற்படுத்தினாள். அங்கிருந்த மூன்று குழந்தைகளை முதலில் காப்பாற்ற போராடினாள். ஆம், தைரியமாக களத்தில் நின்று போராடினாள். பயத்தில் அலறி, பதற்றத்தில் பதுங்கிக் கொண்டிருந்த பயணிகளை, அவசரமாய் வெளியேறுவதற்கான கதவருகே வழிநடத்தி, அரும் பெரும் பாடுபட்டு பலரை வெளியேற்றினாள். குழந்தைகளையும், பயணிகளையும் காப்பாற்றும் போர்க் கவசமாக நீர்ஜா தன் உடலையே பயன்படுத்தினாள். இந்த தியாகமான தீரச்செயலில் குறைந்த பட்சம் மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைக்கப் பெற்றாள் – அடிவயிற்றில், தோள் பட்டையில் மற்றும் புயத்தில் (அவள் தந்தை எழுதுகிறார்). தீவிரவாதிகளின் கோரத் தாண்டவத்தால் கிட்டத்தட்ட 20 பேர் பலியாகினர், 120 பேர் படு காயமடைந்தனர். பலியானவர்களில் அதிகாரி நீர்ஜாவும் ஒருவர். ஆனால், மூன்று குழந்தைகளையும், இன்னும் பிற பயணிகளையும் காப்பாற்றிய பின்னரே தன் இன்னுயிர் துறந்தாள்.
வரலாற்றின் இருண்ட பக்கங்களின் ஒன்றான அன்றைய தினம் நீர்ஜா செய்த செயலானது இயேசு கல்வாரி சிலுவையிலே நமக்காக என்ன செய்தாரோ அச்செயலினை முழுமையற்ற நிலையிலே வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது. விமானத்தில் அவசரமாய் வெளியேறுவதற்கான கதவின் வெளிப்புறமிருந்த சறுக்கலில் தப்பிப்பதை தவிர்த்து உட்புறமிருந்த குழந்தைகள் மற்றும் பிற பயணிகளை பாதுகாப்பதையே தெரிவு செய்தார் நீர்ஜா. அது போலவே, மனு உருவில் வந்த ஒரே கடவுளாகிய இயேசு கிறிஸ்துவும் கொடூர சிலுவை மரணத்திலிருந்து தப்பிப்பதை தவிர்த்து பாழுலகின் பாவத்தில் மூழ்கித்தவிக்கும் உன் மீதும் என் மீதும் அன்பு கொண்டு நம்மனைவரையும் மீட்டெடுப்பதையே தெரிவு செய்தார். ஏனென்றால், நம்மை மீட்டெடுப்பதற்கு தம் இன்னுயிர் நீர்ப்பது ஒன்றே வழி என்பதினாலேயே. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக கொடுங்குற்றம் புரிந்த கொடிய மனிதர்களுக்கான அந்த அகோர சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் தண்டனையிலிருந்து தப்பி விடும்படியாக இயேசுவுக்கு அவரின் சீஷரில் ஒருவரான பேதுரு ஆலோசனை வழங்கினார். (மத்தேயு 16:22-28, திருமறை). எனினும், சிலுவையில் அறையப்படும் படியாகவே இயேசு எருசலேமை நோக்கி செல்ல முடிவெடுத்தார் என்று மனித வார்த்தைகளிலான இறை வார்த்தையாகிய திருமறை சான்று பகிர்கிறது. (லூக்கா 9:51).
நாம் பாவத்தின் நிலையற்ற சிற்றின்பங்களிலே பரவசம் தேடிக்கொண்டு பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களாய் இறைவனை விட்டு வெகு தூரம் தள்ளப்பட்டிருக்கும் பாவிகளாயிருக்கையில் தான், ஆம் அக்கேவலமான நிலையில் இருக்கும்பொழுது தான் இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் அந்த சிலுவையின் பாடு மரணத்தை ஏற்றுக் கொண்டார் என்று திருமறை நமக்கு போதிக்கிறது. (எபிரெயர் 11:25; ரோமர் 5:8, திருமறை). அவர் சிலுவையில் தொங்கிய போது நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் தண்டனை அவர் மேல் வந்தது என்று திருமறை தெளிவுபடுத்துகிறது (ஏசாயா 53:5, திருமறை). நாம் மனம் விரும்பி நம் உடலிலே செய்கின்ற பாவங்களுக்காக – அது போதுமென்கிற மனமில்லாத பெருந்தீனிக்காரனாயினும், ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுய இன்பம் காண்கிறதாயினும், தவறான எண்ணங்களாலும் மற்றும் தவறான செயல்களினாலும் விளைகிற வேறெந்த பாவமாயினும் – அதற்கு தண்டனையாக நம் முதுகு கிழியுமளவிற்கு நமக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, இயேசு அத்தண்டனையை தம் முதுகிலே ஏற்றுக்கொண்டார். மிக வலிமையான உடற் கட்டுடைய டைகர் ஸ்க்ராப்-போன்ற (Tiger Shroff-Like) ரோம சிப்பாய்கள், நொறுங்கிய எலும்பு துண்டுகளும், கூர்மையான ஆணிகளும் பதிந்த தோல் வாரினைக் கொண்டு இயேசுவின் முதுகில் அடித்தனர். இதன் விளைவாக கிழித்தெறியப்பட்ட அவரது முதுகு, இறைவார்த்தையின் முன்னறிவிப்பு நிறைவேறும்படி, ஏர் பூட்டி உழவு செய்யப்பட்ட வயலைப் போல தோற்றமளித்தது. மேலும் இது, இயேசு தம் புவி வாழ்வில் நிறைவேற்றிய 110- க்கும் மேற்பட்ட முக்கிய முன்னறிவிப்புகளில் ஒன்று (மீகா 3:12, திருமறை). நம்மீது கொண்டிருக்கின்ற அளவற்ற அதீத அன்பினாலே, நம் உடல் பெற்றனுபவித்திருக்க வேண்டிய தண்டனையை, அவர் தாமே தம்மீது ஏற்றுக்கொண்டார். (I பேதுரு 2:24, திருமறை).
இது ஏனென்றால், இயேசு கிறிஸ்து நூறு சதவிகிதம் இறைவனாகவும் (தீத்து 2:13, திருமறை), மேலும் காலபரிணாமத்திற்கு அப்பாற்பட்டவராக-வும் இருக்கின்றார். அதனாலேயேதான் அவரால் முக்காலத்திற்கும் உரிய முழு மனுக்குலத்திற்காகவும் பொதுவாய் மரிக்க முடிந்தது. அவர் நூறு சதவிகிதம் இறைவனாய் இருக்கும் அதே வேளையிலே நூறு சதவிகிதம் மனிதனாகவும் இருந்திருக்கின்றார் (அப். 17:31, திருமறை). அதனாலேயே தான், அவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாற்றாகவும் மாறக் கூடும். அதைத்தான் திருமறையும் இப்படியாகச் சொல்கிறது, “இயேசு நம்மில் அன்பு கூர்ந்தார், தம்மையே நமக்காக தந்தார்” (கலா. 2:20, திருமறை). இயேசு நம்மீது அன்புகூர்ந்தது போல ஒருவரும் நம்மீது அன்புகூர்ந்ததில்லை. இயேசு நம்மீது அன்புடனிருப்பது போல ஒருவரும் நம்மீது அன்புடனிருக்கவும் முடியாது. இன்னும் என்ன சொல்லுவது, மரித்த இயேசு மீண்டும் உயிர்பெற்று எழும்பிய அந்த மாபெரும் செயலானது அவரே இறைவன் என்கிற உண்மையை குறிப்பதுமல்லாமல் தங்களையே கடவுளென சுயமாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் நீண்ட நெடிய கூட்டத்தினர் எல்லாருக்கும் மேலானவர் என்பதையம் சுட்டிக் காட்டுகிறது. அப்படித்தான் இதை திருமறையும் பதிவுசெய்கிறது (ரோமர் 1:4).
இதய வெற்றிட பிரச்சனைக்கான ஒரே தீர்வு நாம் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் பாவ வாழ்க்கையை விடுத்து அருமருந்தாம் இயேசு கிறிஸ்துவை மனதார நம்புவது மட்டும் தான். அதாவது அன்புநிறை அர்ப்பணிப்புடன் பாவத்தின் வழியிலிருந்து முற்றிலுமாய் திரும்பி (கொண்டையூசி திருப்பம் போல) இயேசுவை நோக்கிச் செல்லுவதேயாகும். இதைத் தான் திருமறையும் நமக்கு கற்பிக்கிறது. யூ – ட்டர்ன் (U-TURN) என்ற திகில் நிறைந்த இந்திய திரைப்படம், 2018-ம் ஆண்டு சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என்பவரின் நடிப்பில் வெளி வந்தது நாமறிந்ததே. பாவம் நிறைந்த வாழ்க்கை பயணத்தின் பாதையிலிருந்து இயேசு எனும் பூர்வ பாதைக்கு கொண்டையூசி வளைவில் (U-TURN) திரும்புவது போல பூரணமாய் திரும்பும் பொழுது, நம்முடைய அங்கலாய்க்கும் மனதிற்கு தெய்வீக அமைதி கிடைக்கும் என்று இறைவார்த்தை உறுதியளிக்கிறது (எரே. 6:16, திருமறை). இதையே “மனம் திரும்புதல்” என்றும் திருமறை கூறுகிறது. மனந்திரும்புதலை குறித்து இயேசுவும் பிரசங்கித்தார். அவர், “நீங்கள் மனந்திரும்பாவிட்டால் நீங்களும் அழிந்து போவீர்கள்!” என்றார். (லூக்கா 13:5, திருமறை). செல்வத்தின் மீதிருந்த பற்றினால் “மனந்திரும்பாத” ஒரு பணக்காரன் நரகத்தில் பயங்கரமான “வேதனையை” அனுபவிக்கப்போகும் ஒரு சம்பவத்தை இயேசு விவரித்ததை இறைவார்த்தையில் நாம் பார்க்கலாம் (லூக்கா 16:28-30, திருமறை).
அத்தியாவசியமான தெரிவு/தேவையான தெரிந்தெடுப்பு (The Selection)
மிடுக்கான கையடக்க அலைபேசியின் பயன்பாட்டிற்கு ஆப்பிளா (APPLE) அல்லது ஆண்ட்ராய்டா (ANDROID) எனத் தெரிவு செய்கின்றோம். பகட்டான உணவகங்களிலே சுவையாக உண்பதற்கு சப்வேயா (SUBWAY) அல்லது சரவணபவனா (SARAVANA BHAVAN) எனத் தெரிவு செய்கின்றோம். இணையத்திலே விருப்பமான பொருளை வாங்குவதற்கு அமேசானா (AMAZON) அல்லது பிளிப்கார்ட்டா (FLIPKART) எனத் தெரிவு செய்கின்றோம். என்ன சொல்லுவது! வாழும் வாழ்க்கை முழுவதும் தெரிவுகளாலே நிறைந்திருக்கிறது. அதுபோலவே, இயேசுவை நம் வாழ்வில் தெரிவு செய்வதை பற்றி நீயும் நானும் நிச்சயம் சிந்திக்கவேண்டும்.
இறைவனை சென்றடைவதற்கான ஒரே வழி இயேசுவே [அதோடுகூட இதயத்தின் வெற்றிடத்தை முழுமையாய் நிரப்பக்கூடியவரும் அவரே] (யோவான் 14:6, திருமறை). இயேசு என்ற பெயரினைத் தவிர்த்து வேறொன்றினைக் கொண்டும் நாம் மீட்படைந்துவிட முடியாது (அப்போ. 4:12, திருமறை). இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுகொள்வதைக் குறித்த தெரிவை நாம் நிச்சயம் செய்தேயாகவேண்டும் (I இராஜா. 18:21; யோசு. 24:15, திருமறை). ஒருவேளை இயேசுவை உலகத்தில் வாழ்ந்தவர்-களிலேயே மிகப்பெரிய பொய்யர் என்று சொல்லலாம். அல்லது ஒரு மரை கழண்ட பைத்தியக்காரர் என்று சொல்லலாம். இல்லையெனில் அவர்தான் ஆண்டவர் – என்னுடைய ஆத்துமத்தை மீட்க வந்த ஒரே இரட்சகர் என்று சொல்லி உங்கள் இதயத்திற்குள்ளும் வாழ்விற்குள்ளும் வரும்படி அவரை வரவேற்கலாம். ஆனால், பொத்தாம் பொதுவாக “இந்த உலகத்தில் வாழ்ந்த நல்ல மனிதர்களுள் இயேசுவும் ஒருவர்.” என்று ஏற்றுக்கொண்டு உரிமைகொண்டாட வழியே இல்லை உண்மை-யென்னவெனில், இயேசுவை நீங்கள் இவ்வுலகத்தின் நல்ல மனிதர்களுள் ஒருவர் என்றோ அல்லது இறையடியவர்களில் ஒருவர் என்றோ அழைக்கமுற்பட்டால், அவரை பொய்யர் என்றே அழைக்க விளைகிறீர்கள். ஆனால், மேற்கண்டவற்றுள் ஏதாவது ஒன்றினை நீங்கள் அவசியம் தெரிவு செய்தேயாக வேண்டும். அவர் பொய்யராய் இருக்கவியலாது. ஏனெனில், அவரில் எவ்வளவேனும் பாவமில்லை என்று திருமறை பதிவிடுகிறது. அவரொரு பைத்தியக்காரராயும் இருக்க முடியாது. அவர் சிலுவையிலே ஆணியடிக்கப் படுகையில் ஒரு பைத்தியக்காரனைப் போல் பல்லிளித்து சிரித்துக் கொண்டிருக்கவில்லை – நீங்கள் அதை கவனித்தீர்களா? இவையனைத்தும் நம்மை ஒரு தெரிவிற்கு மட்டுமே இட்டுச் செல்லுகிறது. சொர்க்கலோகத்திற்கான ஒரே வழி அவரே; அவ்வழி ஒன்றே நம் வாழ்வின் நோக்கத்தை முழுமையாய் நிறைவு செய்கிறதுமாகும். திருமறையில் அவர் திட்டவட்டமாக கூறியது என்னவெனில், “நான் யாரென்று என்னைக்குறித்து சொல்லியவண்ணமே நீங்கள் என்னை நம்பாவிட்டால், உங்கள் பாவங்களிலேயே மாண்டு போவீர்கள் (அதாவது முடிவாக கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினையை அடைவீர்கள் என்பதையே இது குறிக்கிறது)” (யோவான் 8:24; வெளி. 21:7-8, திருமறை).
அவசரத்தின் அவசியம் (The Swiftness)
“ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆரம்பத்தில் இரண்டு கோல்கள் பின் தங்கியிருந்த பெல்ஜியம் அணி, திடீரென விஸ்வரூபமெடுத்து அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டம் முடிவதற்கு ‘கடைசி இரண்டு வினாடிகள்’ நிறுத்த நேரம் மாத்திரமே எஞ்சியிருந்த போது (ஒரு கோல் அடித்து) போட்டியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.” – இவையே ரஷ்யாவில் 2018-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கால் பந்தாட்ட போட்டியின் ஒரு விறுவிறுப்பான ஆட்டம் பற்றி புகழ்பெற்ற கால் பந்தாட்ட எழுத்தாளர் சைமன் பர்ன்டன் (Simon Burnton), 2 ஜூலை 2018 அன்று தி கார்டியன் (The Guardian) பத்திரிகையில் உதிர்த்த வார்த்தைகள். இதைபோன்றே, நம்மில் ஒரு சிலர் மனந்திரும்பிய உள்ளத்தோடு இயேசுவிடம் வந்து சேர, நம் வாழ்க்கை முடிவதற்கு “கடைசி இரண்டு விநாடிகள்” வரும் வரை காத்திருக்க விரும்புகிறோம்! யோசித்துப் பார்ப்போமேயானால் அது ஒரு சிறந்த செயலில்லை!
ஒருவேளை, இயேசுவை நமது வாழ்க்கைப்பாதையாக தெரிவு செய்து கொள்வதற்கும், மனம் திரும்புவதற்கும் நமக்கு இன்னும் ஏகப்பட்ட கால அவகாசம் நிறையவே இருக்கிறது என நாம் மெத்தனமாகவும், மேம் போக்காகவும் இருக்கக்கூடும். இந்த காரியத்தில் அத்தகைய உறுதியுடன் நாம் இருப்பது நல்லதல்ல! இருக்கவும் கூடாது. திருமறையிலே, மனம் திரும்புவதற்கு தனக்கு அதிக நேரம் இல்லாத, லோத்து என பெயர்கொண்ட ஒரு மனிதனுடைய மனைவியைப் பற்றி இயேசுவும் பேசியிருக்கிறார் (லூக்கா 17:32). தன்னுள் பெருகிய பாவ காரியங்களினாலே, இறைவனின் கோபாக்கினைக்கு உட்பட்டு தீக்கிரை யாக்கப்பட்ட பட்டினத்தைச் சேர்ந்தவள் அவள். தன் பட்டினம் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பாக, தன்னை காத்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தயவாய் அருளப்பட்டு அவசரமாய் அருகிலிருக்கும் மலைக்கு ஓடிச்செல்லுகையில், பாவத்தை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் கடைசியாக ஒரே ஒரு முறை தன் பட்டினத்தைப் பார்க்க திரும்பினாள். அந்தோ பரிதாபம், உப்புத் தூணாக மாறி உடனடியாக தன் உயிரை விட்டாள். கிறிஸ்துவினிடம் வெகு முன்னதாகவே வந்துவிட்டோம் என்ற நிலையே கிடையாது. மாறாக நொடிப்பொழுதும் தாமதித்துவிடலாகாது. ஏனெனில், நமக்கு மரணம் நேர்ந்த பின்போ அல்லது மானிடர் அனைவரையும் நியாயம் தீர்க்கிறதற்கு இரண்டாம் முறையாக இயேசு திரும்பி வந்த பின்போ இரட்சிப்படைவதற்கு வாய்ப்பேயில்லை என்பதைத் தான் திருமறையும் வெளிப்படுத்துகிறது (எபிரெயர் 9:27). எனவே, நாம் தாமதிக்காமல், மிக துரிதமாக இயேசு கிறிஸ்துவிடம் இந்நேரமே வந்து சேர வேண்டும்! நம்முடைய பாவங்களை நாம் இயேசுவிடம் வெளிப்படுத்தி, மனந் திரும்பிய இருதயத்தோடு அவரிடம் ஒப்புக் கொண்டால், அவர் உலகத்தை நியாயந் தீர்க்க இரண்டாவது முறையாக திரும்பி வரும் போது, கல்வாரி சிலுவையில் அவர் சிந்திய குருதிக்காக நன்றி பாராட்டுவோம், ஏனெனில் நம்முடைய பாவங்கள் அனைத்தும் அக்குருதியினால் முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும் எனத் திருமறையும் எடுத்தியம்புகின்றது (I யோவான் 1:9). ஆனால், மறுபுறம், நாம் இப்போது நம்முடைய பாவங்களை மூடி மறைத்து, பாவமே செய்யாதது போல பகுமானமாய் சுற்றித் திரிந்தால், நியாயத் தீர்ப்பின் பெரிய நாளில், நாம் அவமானப் படும்படியாக நம்முடைய பாவங்கள் அனைத்தும் உலகெங்கும் வெட்ட வெளிச்சமாக பகிரங்கப் படுத்தப்பட்டு, நம்மை நித்திய வேதனையைக் கொடுக்கும் நரகத்திற்கு நேராக வழி நடத்தும் என்று திருமறை திட்டவட்டமாக கூறுகிறது (நீதிமொழிகள் 28:13; ரோமர் 2:5; வெளி. 21:7-8).
ஆகையினாலே, எளிமையான நம்பிக்கையுடனே, இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். அதாவது, அவர் மரித்துப் பின்பு உயிர்த்தது நம் நெஞ்சத்தின் வெற்றிடத்தை நீக்கவே, என்கிற காரியத்தின் காரணரைப் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ளமுடியாவிட்டாலும் பரவாயில்லை, காலத்தின் அருமையைக் கருத்திற்கொண்டு சற்றும் தாமதியாமல் உடனடியாக அவரிடம் வந்து சேருங்கள். இயேசுவின் அரவணைக்கும் செட்டைகளின் கீழ் நீங்கள் வந்தடைந்து அவருடன் தொடர்ச்சியான அன்புறவில் எப்போதும் நிலைத்திருந்தால், புயல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பைப் போன்ற வாழ்வின் கடுமையான வேளைகளிலும் யாரும் தரவியலா பரம அமைதி உங்களுடையதாகும். (லூக்கா 19:42, திருமறை).
கீழ்க்காணும் இந்த சிறிய பிரார்த்தனையை நீங்கள் ஆத்மார்த்தமாய் செய்யும்பொழுது, இயேசுவை நீங்கள் உங்கள் இதயத்திற்குள்ளும் மற்றும் வாழ்விற்குள்ளும் வரவழைப்பதுமல்லாமல் இதயத்திற்குள்ளிருக்கும் வெற்றிடம் நிரப்பப்படுவதையும் (வெறுமை நீங்குவதையும்) காண்பீர்கள்:
“அன்புநிறை இயேசுவே, நான் ஒரு பாவி. உமக்கு விரோதமாக பாவம் செய்து எனது இருதயத்தை வெறுமையாக்கினேன் என்று உண்மையாக ஒத்துக்கொள்கிறேன். என்னை தயவாய் மன்னித்தருளும். நான் சொல்லாலும், செயலாலும், செயலுக்குப் பின்னிருக்கும் மறைந்த எண்ணங்களாலும் செய்த பாவங்களை நினைத்து வருந்தி மனம் திரும்புகிறேன். என்னிமித்தம் நீர் அந்த மலையின் மேலே கல்வாரி சிலுவையிலே உயிர்நீத்து பின் மீண்டும் உயிர்த்தெழுந்ததுக்காக என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். நீர் தாமாகவே முன்வந்து சிந்திய விலைமதிக்கவியலா அந்த மாசற்ற திருரத்தத்தால் என்னை தூய்மைப் படுத்தியருளும். உமக்காக ஒரு நல்வாழ்வு, பரிசுத்த ஆவியாகிய இறைவனின் துணை கொண்டு வாழ்ந்திட உறுதியளிக்கிறேன் என் அன்பு இறைவா. அப்படியே ஆகக்கடவது (ஆமென்)!”
பாவத்திலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவை நம்பிய பின், அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பினால் அகத்திலே தூண்டப்பட்டு, களிப்புடனும் மற்றும் கவனத்துடனும் அவரோடு நேரத்தைச் செலவிடும்வண்ணம்:
- திருமறையை தினமும் தியானித்து அசைப்போடுங்கள் (CHEW). [திருமறையை வாசிப்பதற்காக எளிதில் கிடைக்கின்ற எளிமையாய் படிப்பதற்கான பதிப்பாகிய திருமறை செயலியை (ESV Bible App) உங்கள் மிடுக்கான கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்]
- திருக்குமாரனுடன் தினமும் பிரார்த்தனை வாயிலாக (அளவளாவுங்கள்) அன்பாய்ப்பேசிடுங்கள் (CHAT).
- திருச்சபை – இறைவார்த்தையை நம்பி தூயாவியானவரால் நடத்தப்படுகின்ற – ஒன்றினிலே இணைந்து (CHECK in) இறைவனை ஆராதித்திடுங்கள்.
- திருப்பணி – நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ்துவை (CHAMPION Christ) பிறருக்கு நம் வாழ்க்கையாலும், வார்த்தையாலும் தெரியப்படுத்தும் பணியினை – மனதார ஆற்றிடுங்கள்.
(இந்த கட்டுரை தனிச் சுற்றுக்கு மட்டும்)
இந்தக் கைப்பிரதியின் ஆசிரியரான முனைவர். டியூக் ஜெயராஜ், HSBC குழுமத்தில் பொறியாளராக பணி புரிந்து பின்னர் முழு நேர திருமறை சத்தியத்தை எடுத்தியம்பும் போதகரானவர். இதைப் போல இவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளை படிக்க http://www.purposeSPOT.blogSPOT.com என்ற இணைய தளத்தை பார்வையிடவும். ஒரு வேளை, உங்களுக்கு ஏதாவது கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி emailduke@gmail.com அல்லது http://www.facebook.com/GoogleDuke என்பவற்றின் வாயிலாக ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற கட்டுரைகள், வீடியோ செய்திகளுக்கு – www.facebook.com/DukeTamizh
இக்கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவியர்கள் – ஜெஸ்மன், பேராசிரியர் ராபின், பெயர் வெளியிடவிரும்பாத மற்றுமொருவர்.