Categories
Tamil Articles of Duke Jeyaraj

உடன்பிறப்பினும் உற்ற தோழன்

டியூக் ஜெயராஜ்

  இன்றைய வாலிப இதயங்களை வளைத்துப் போட்டுவிட்ட ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் – “FRIENDS” (நண்பர்கள்). சேதி தெரியுமா? நண்பர்களையே மையமெனக்கொண்டு இத்தலைமுறையினர் வாழ்ந்தாலும், தனியாகவே தவிக்கின்றனர். நம்ப முடியாவிடினும், நடப்பு அதுதான்! தோள்கள் உரசித் தோழரோடு நடக்கையிலும், தொலைதூரத் தனிமை வலியில் துவளும் உன் இதயம். ஒரு பிரபல இசைக்குழுவினரின் பாடல் இப்படியாய்… : ”உலகில் நான் ஒற்றையனாய்… “

  தனிமையையே தோழமையாய்க்கொண்டு தவிக்கும் இத்தலைமுறைக்கு உடன்பிறப்பினும் உற்ற தோழன் ஒருவரை (நீதி 18:24) அறிமுகப்படுத் துவதே என் மகிழ்ச்சி. யார் அவர்? இயேசு! அவரை இக்கால எழுத்துக்கள் சரியாய்க் காட்டவில்லை. நெருங்கவியலா ஒளியில் வாழ்பவராக   அவரைக் காட்டும் எழுத்துக்கள், ஐயமின்றி, உண்மையே! ஆயினும், அவ்வளவுதானா? நம் வலியுணரும் நண்பராய் காட்டுவதில், தோற்றுப் போயினவே! அவர் 100% கடவுள் என அறிவோம்; ஆனால் அவரின் 100% மனிதத்துவத்தை மகிழ்ந்து கொண்டாடியது நம்மில் எத்தனை பேர்? கடைசி வரியை மறுபடியும் வாசியுங்கள்…! இயேசுவை மனிதனாக ஏற்பதென்பது, வாசித்தறிந்து மூளையில் பதித்த வறட்டு உண்மையா? —- இல்லை —- நேசித்தறிந்து நெஞ்சில் பதிந்த நெகிழ்ச்சியுணர்வா?  என்பதே என் கேள்வி.

   இயேசுவோடு உண்டுறங்கிய அவரது சீடருமே, அவரது திருத்தன்மையில் கரைந்துபோயினரே! அதிரவைத்த அற்புதமொன்றைக் கண்டவுடன், தங்களுக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டனர்: “யார் இவர்?  காற்றும் கடலும் கால்முடங்கும் இவர் யார்?” (மாற் 8:27). ஆனால் —- என்றாவது, எவராவது கடின நாளின் மாலையில் களைத்தமர்ந்திருந்த இயேசுவின் கன்னத்தில் வழிந்த வியர்வைத் துளி கண்டு, “ஏய்! பாரங்கே! நம்ம ஆள்தான் அவர். நம்ம பாடு அவருக்கும் புரியும்போலிருக்கே!” என வியந்ததுண்டா? முற்றிலும் மாறாய் வேறு சிலர், அவரை வெறும் மனிதனாகவே பார்த்து வீணாய்ப் போயினர்: “பார்றா! ஆசாரியின் மகன்தானே இவன்! இவனது தம்பி, தங்கச்சி மாரை நமக்குத் தெரியாதா?” என அவரைத் தள்ளினர், எள்ளினர்! அவர்களைப்போல அரைவேக்காட்டுத்தனமாக “இயேசுவை மனிதனாக மட்டும் காணும்” அறிவல்ல நான் ஆலோசிப்பது— நிச்சயமாய் அப்படியல்ல!

   இயேசு யார்? சாமுவேல் டிக்கி கார்டனைக்(Samuel Dickey Girdon) கேட்போமா? அவர் சொன்னார்:“மனித மொழியில் எழுதப்பட்ட கடவுள் எனும் வார்த்தையே இயேசு.” பொட்டில் அடித்தாற்போல புரிய வைத்தார்! இளைஞரே, இயேசு ஏன் நம்மைப் புரிந்து கொள்ள இயலும்? எண்ணிக்கையற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் சில—-

  1. நம்மைப் போலவே உலகிற்குள் வந்தார்!

      உலகிற்கு நாம் வந்தது எவ்வழியாய்? தவிர்ப்பின்றி, அன்னையின் கருவறை வழியாகவே அனைவரும் வந்தோம்; அப்படியேதான் வந்தார் இயேசுவும் கூட! கருவுக்குள் வந்ததில் தான் அவர் வேறுபட்டாரேயொழிய, கருவழியாக வந்ததிலல்ல! கருவுக்குள் அவர் வந்தது கடவுளின் ஆவியாலே… அதனால்தான் கருவுற்ற நிலையிலும் கண்ணியாகவே  இருந்தாள் மரியாள்!(மத்தேயு 1:18-20).  ஆனாலும் அவர் குழந்தையாய்ப்  பிறந்தது அசாதாரணமானதொன்றல்ல! ஆகவேதான் நாம் வாசிக்கிறோம்: “காலம் நிறைவேறியபோது…  கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்”(கலா 4:4,5). ஆகாயத்திலிருந்து அப்படியே போடப்பட்ட அதிசய ஆளல்ல அவர் என்ற பேருண்மையை அழுத்த ஆவலுருகிறேன். ஸ்பைடர்மேன் போல் விண்வெளிக்கப்பலிலா விரைந்து வந்திறங்கினார்? பெண்ணின் கருவன்றி, பிறிதொரு கலமல்ல— அவர் வந்தது! அதுவும், அவசரமாய்க் குறுகிய காலத்தில் குதித்து வெளிவந்தாரா? இல்லை நண்பா, நம்மைப் போலவே முழுநேரக் கருவாசம் கழிந்தே முகிழ்த்தார் பூவினில், மனிதனாய்! அவரது பிறப்பு—- கருத்தரித்த கணம் தவிர—- முழுவதும் “இயேசு மனிதனே” என்ற முத்திரையை அழுத்தமாய்ப்  பதித்துள்ளது.

2. நம்மைப் போலவே கற்றார்!

   இயேசு எல்லாவற்றிலும் வளர்ந்தார்(லூக்கா 2:52). லூக்கா சொல்வது: “அவர் உடலிலும், ஞானத்திலும் வளர்ந்தார்.” விளக்கம் புரிகிறதா? நீங்களும் நானும் “ஆனா, ஆவன்னா…” என்று கத்திக் கற்றது போலவே, அவரும் எபிரெய எழுத்துக்களைக் கற்றார். எல்லா யூதச் சிறுவர்களைப் போலவே, இவரும் பழைய ஏற்பாட்டைக் கரைத்து குடித்தார். வயதுக்கு மீறிய ஞானம் அவரில் காணப்பட்டது உண்மைதான்(லூக் 2:40). ஆயினும், மறவாதீர்: அவர் தியானத்தில் வ-ள-ர்-ந்-தா-ர் (லூக் 2:40). நாம் வளர ஆரம்பித்த போது, நமது சட்டைகள் சின்னதாய்ப் போய்விட்டது நினைவிருக்கிறதா?  இயேசுவுக்கு இவ்வனுபவம் இருந்திருக்கவேண்டும். பாவம் தவிர எல்லாவற்றிலும் அவர் மனிதத்துவத்தின் மணம் நுகர்ந்தவரே! (எபி 2:14).

   ஆகவேதான், என் இளந்தோழா! அழுத்திச் சொல்வேன் நான்: உன் கணக்குப்  பரீட்சையின் கடினமோ, பவுதீகப் பரீட்சையின் பயமோ.. எதுவானாலும் அவர் அறிவார். முற்றிலும் உன் போலவே படிப்படியாய்ப் படித்தவர் அவர். ஆகவே, அவர் அறிவார்.

3. நம்மைப் போலவே தோற்றம் உடையவர்!

   டைம்(TIME), நியூஸ்வீக்(NEWSWEEK) போன்ற பிரபலப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்துள்ளது இயேசுவின் திருமுகம். எல்லாப்  படங்களும் அவரைச் சொக்கும் அழகனாய், சுருள்முடிச் சுந்தரனாய்,        மறுக்களும் சுருக்கமும் அற்ற மயக்கும் முகத்தவனாய்த்தான் காட்டுகின்றன.

 நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முகமும் இயேசுவுக்கு உண்டு. “அவரிடம் அழகோ, அமைப்போ இல்லை; கவர்ச்சியான தோற்றமும் இல்லை. இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய்த் துயரத்தி வாழ்ந்தவராய் இருந்தார்; கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை”(ஏசா 52:2,3). யூஜின் பீட்டர்சன் என்பவரின் மொழியாக்கம் இப்படிச் சொல்கிறது; “இன்னொரு முறை” ஏறெடுத்துப் பார்க்கும்படியாய் அவர் முகத்தில் சிறப்பாய் “எதுவும் இல்லை” கவனி, நண்பனே!

 திருமுழுக்கன் யோவானைக் கேட்போமா? தனித்த தெய்வீக வெளிப்பாடு ஒன்று இல்லாது, பார்த்த மாத்திரத்தில் `இவர்தான் இயேசு´ என்று அவனால் இயேசுவை அடையாளப்படுத்தியிருக்கக்கூடுமா?  கூடவில்லையே! திரள் நடுவில் அவரைத் தனித்துக் காட்டும் தீர்க்கமான வடிவமைப்பு அவருக்கில்லை. அவர் சாதாரணராய் இருந்தபடியால்தான், அவரைக் கொல்ல சிலர் எத்தனித்த வேளை, அவரால் சுற்றி   நின்றோரிடையே கலந்து நழுவ முடிந்தது, ஆகவேதான் சிலர் அவரை வெறுமனே `தச்சன் மகன்´ என்றும் `தச்சன்´ என்றும் அழைக்கத் தோன்றியது(மாற் 6:3;மத் 13:55). சாதாரணக் கலிலேயக் கரடுமுரடுதான் அவரது தோற்றம்.

   நான் சொல்ல வந்த செய்தி இதுதான். இப்பூமியில் இயேசு நடமாடிய காலத்தில் எவரும் அவரைப் பார்த்து, “என் இளவயது முதல் இம்மட்டும் இவர் போன்ற அழகு மன்னனைக் கண்டதில்லை” என்று சொல்லியிருக்கவே முடியாது. வசீகரம் அற்ற வழக்கமான தோற்றம்தான் அவருடையது. பிலிப்பான்ஸி சொல்வது நமது கவனத்துக்குரியது: “ இயேசுவின் தோற்றத்தில் நாம் ஏற்றியிருக்கும் கவர்ச்சிச் சாயம் எல்லாம் இயேசுவைப்பற்றி ஒன்றுமல்ல—(மிகைப்படுத்தும்) நம்மைப் பற்றியே அதிகமாய்ச் சொல்கிறது.” என்றாவது, “நான் அழகாயில்லை” என்று நீ  நினைத்ததுண்டா? கவரும் தோற்றம் இல்லையெனக் கவலைப்பட்டதுண்டா? உன் உணர்வுகளை இயேசு புரிந்துகொள்கிறார். அவரும் கூட ‘அப்படியொன்றும்’  அழகானவர் அல்ல!

4. நம்மைப்போலவே உணர்வுகள் உடையவர்!

   இயேசு உணர்ச்சியற்று உறைந்து போனவரல்ல; உயிரற்ற இயந்திரமுமல்ல! உணர்ச்சிமயமானவர்—- உன்னையும் என்னையும் போல! அந்திரேயா பிலிப்புவிடம் தனது சாவு குறித்துப் பேசும்போது, அவரது ஆன்மா கலக்கமடைந்துள்ளதாக வெளிப்படையாய் ஒப்புக்கொள்கிறார் (யோவான் 12:27). தான் கொல்லப்படப் போவதைக் குதித்துக் கொண்டாடி அறிவிக்கவில்லை. வலியை உணர்ந்தார். அவர் இயல்பானவர்தான், நண்பா,  உன்னையும் என்னையும் போலவே. “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்று சொன்ன வேளையில், அவர் மனக் கலக்கத்தில் இருந்தார் என அவருக்கு நெருங்கிய நண்பன் யோவான் தெரிவிக்கிறான்(யோ 13:21). முதுகில் குத்தப்பட்ட அவருக்கு இரத்தம் வழிந்தது இதயத்தில். நம்பிக்கைத் துரோகம் நமக்குச் செய்வதும் இதுதானே!

   நண்பனின் மரணம் அவரது கண்களை நனைத்தது(யோ 11:35). உன் கண்ணீர்ப் படலத்தின் பின்புல வழியை அவர் உணர்கிறார். ஆம், நீ நடந்து வரும் பாதை அவர் பாதம் படாததல்ல!

   எந்த வலியாயினும்— தேர்வில் தேறாத போதும், வாலிப நட்பு வஞ்சிக்கும் போதும், உன் இதயம் பந்தாகி நம்பினவரின் கால்களில் உதைபடும் போதும்— எந்த வலியாயினும், இயேசு அறிகிறார். நீ செய்கிற எல்லாவற்றையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், நீ ஏன் அதைச் செய்கிறாய் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

   2001 கல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், பாய்ந்து வந்த ஆஸ்திரேலியப் பந்து வீச்சுக்களைப் பயமின்றி எதிர்கொண்டு நாள் முழுக்க நின்று சாதித்த லக்ஷ்மனையும், ட்ராவிடையும் கண்ட ரசிகர் கூட்டம் இமைக்க மறந்தது. முதல் இன்னிங்சில் 274 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையிலிருந்த இந்திய அணியைத் தனது 281 ஓட்டங்களால் வெற்றிச் சிகரம் இட்டுச் சென்ற லக்ஷ்மனைப் பார்த்து வாய் பிளந்தது. கண்களைக் கசக்கி காண்பது நிசமா என உறுதி செய்தது. பிரமிப்புணர்வின் பிரமிடுகள்— இளைஞர் வாழ்வில் எங்கும் எழும்பி நிற்கும். இயேசுவுக்கும் அப்படியே! யூதனல்லானொருவன் இயேசுவின் ஒருவார்த்தை எங்கோ இருக்கும் தன் வேலைக்காரனைக் குணப்படுத்த இயலும் என நம்பிய போதோ, இயேசு ‘வியந்து’ போனதாய் வேதம் விளம்புகிறது(மத் 8:10).  நம்கால மொழியில் சொல்வதானால்,  ‘அவர் கண்கள் விரிந்தன!’.

   வார்த்தைகள் சிதறி வெளிப்படும்படி ஆத்திரத்தில் அதிர்ந்துபோகிறவரா நீங்கள்?  உங்களுக்கும் இயேசு ‘நம்மாளு’ தான்! அவருக்கும் அது நேர்ந்தது. பண்டிகைக் காலத்தில்— மார்ச் முடிந்து ஏப்ரல் துவங்கும் பருவம்— ஒருநாள், உண்ணத்தக்க மொட்டுகள் ஏதேனும் உண்டோ என்று அத்திமரம் ஒன்றில் தேடினார். அப்படிப்பட்ட மொட்டுக்கள் வரும் காலமாயிருந்தும்,  மொட்டுக்கள் ஒன்றும் அம்மரத்தில் காணப்படவில்லை. மொட்டுக்க ளின்மையே அவ்வருடம் அம்மரம் கனி கொடாது எனக் கட்டியம் கூறியது. ஆனாலும் ஏதோ கணிகள் கொடுக்கப்போவதைப்போல இலைகள் நிறைந்து ஏமாற்றிய அம்மரத்தின் தோற்றம், யூத மதத் தலைவர்களை இயேசுவின் மனக்கண்ணின் முன்னே நிறுத்தியது போலும்! கடுங்கோபம் மூளக் கடிந்துகொண்டார் மரத்தை! தந்தையின் ஆலயம் சந்தைக் கடையாய் மாறிப்போனதைச் சகிக்க முடியாத சாந்தமூர்த்தி,  சண்டமாருதமாய்  உள்நுழைந்தார். உண்டு இல்லையெனப் பண்ணி விட்டார். அநியாயத்தைப்  பார்த்து, அமைதியாய் ஏற்க முடியாது, ஆவேசப்பட்டார். நமக்கும் இது நேர்ந்திருக்கிறதா இளம்புயலே! கொடுமை கண்டு கொதிக்கிறோம்; சிறுமை கண்டு சினக்கிறோம்! இயேசுவுக்குப் புரியும்.

5.  நம்மைப்போலவே நட்பு நாடினார்!

   ஒரு குரங்கு இன்னொரு குரங்கின் உடனிருப்பை நாடும். “ஆஹா! என்னவொரு கண்டுபிடிப்பு!” என ஏளனமாய்ச் சிரிக்கிறாயா? கொஞ்சம் பொறு! ஒரு மனிதன்தான்—குரங்கல்ல— இன்னொரு மனிதனின் உடனிருப்பை   உண்மையாக ரசிக்க முடியும். சரிதானே?

   இயேசுவுக்குப் “பாவிகளின் நண்பர்” என்று ஒரு பட்டப்பெயர் உண்டு. நாம் ஒவ்வொருவருமே பாவிதான்(ரோ 3:23). அப்படியெனில், இந்தப் பட்டப் பெயரை “மனிதர்களின் நண்பர்” என மாற்றலாமே! மனிதர்களுடனேயே சுற்றித் திரிய அவர் விரும்பினார்  என்கிற கருத்தை இப்பெயர் தெரிவிக்கிறது. வாரக்கணக்கில் தொடரும் யூதத் திருமணங்களில் கலந்து கொள்ள அழைக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவரது ‘அற்புதம் செய்யும் வல்லமையைப்’ பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் அவரை அழைத்தனர் என எண்ணாதீர்! அவரது முதலாம் அற்புதமே கானாவூர்க் கல்யாணத்தில்தான் என்றால் அர்த்தம் என்ன? அக்கல்யாணத்துக்கு அவர் அழைக்கப்படும் போது, அவர் அற்புதம் எதுவும் செய்திருக்கவில்லையென்பதுதானே! பின், ஏன் அழைத்தனர்? மாக்ஸ் லுக்காடோ(Max Lucado) காரணம் சொல்வார்: திருமண விருந்தினர் பட்டியலை முடிவு செய்யும் வேளையில், யாரோ ஒருவர் சொல்லியிருப்பார்: “இயேசுவையும் அவர் கூட்டத்தையும் கூப்பிடுங்கப்பா! அவங்க இருக்குற இடமே ‘கல, கல’ வெனக் குஷியா மாறிடும்!” லுக்காடோவின் பேனா வரையும் சொற்சித்திரம் இது: “எல்லாம் வல்லவர் தன்னைப் பெரிதாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அவர் புனிதர் தான். ஆனாலும், ‘நான்—உன்னைவிட—பெரியவன்’ என்று நெற்றிப்பட்டயம் கட்டிக்கொண்டு அவர் சுற்றித்திரியவில்லை” உங்களால் நம்ப முடிகிறதா? — இயேசு ஒரு கல்யாண விருந்தில் கலந்துகொள்ள 90 மைல்கள் நடந்திருக்கிறார். மனிதர்களோடு கொஞ்சம் ‘ஜாலி’யாயிருக்க, 90 மைல்கள் கால் வலிக்க நடந்திருக்கிறார்.

   நண்பரோடு ‘சும்மா’ சுற்றித்திரிய உன் மனம் துடிக்கிறதா?  இயேசுவுக்கும் அப்படித்தான்!

6. நம்மைப்போலவே உன்னதம் விரும்பினார்!

   ஊர்மிளா(இந்தி நடிகை) ஒருமுறை சொன்னார்: “இரவின் தனிமையில் என்னோடு பேசுவதற்கென ஒருவரை என் மனம் தேடுகிறது” அதுதான் இன்றைய தலைமுறையின் ஏக்கம். தனிமையின் குமுறல். வானங்களைத் தாண்டி ஏதோ ஒன்றைத் தொட்டுவிடும் கதறல்.

      தவறாய்ப் புரிந்துகொள்ளாதீர். இயேசு இறைவனே— ஒவ்வொரு அணுவிலும்! ஆனால், அவர் மனிதனும் தான். ஆகவே எல்லா மனிதரைப் போலவே அவருக்கும் இந்த ‘உன்னதம் நாடும் உணர்வு’ இருந்தது. இந்த உணர்வுதான் அவரை ஜெபிப்பதற்கு உந்தியது. அதிகாலையில் ஜெபித்துக் கொண்டிருந்தார்(மாற் 1:35). மாலைகளிலும் கூட அதனையே செய்தார்(மத் 14:23). இரவிலும் மலைமீதேறி ஜெபித்தார்(லூக் 6:12, 13). ஆதாரில் பதிந்துவிட்ட பழக்கமிது(லூக் 5:16).

   உன்னையும் தாண்டி உயரங்களில் ஏதோவொன்றைத் தேடும் ஏக்கவுணர்வு உனக்குள் இருக்கிறதா? உன் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள இவ்வுணர்வை இயேசுவும் அறிவார். அவருக்கும் இவ்வுணர்வு இருந்ததே! ‘இந்த எதையோ தேடும்’ உணர்வேற்படுத்தும் வெற்றிடமே சில வாலிபரை மதுவுக்கும் மாதுக்களுக்கும் தள்ளிவிடுகிறது.  இயேசு இவ்வழிகளை அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் ‘ஏன் இப்படி ஓடுகிறோம்’ என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார். நமது சுகத்தையும், நிறைவையும் கடவுளிடமே காண முடியும் என்பதற்கு இயேசுவின் வாழ்வே சான்றுறுதி!

   தனது தந்தையோடு உள்ள இந்த அமானுஷ்ய உறவு சிலுவையில் (அவர் செய்யாத குற்றத்துக்காக) துண்டிக்கப்பட்டபோது,  இயேசு கதறினார்: “என் தேவனே,  என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” பாவத்தை ருசித்து,  இவ்வுலகின்பங்களில் நம்மை இழந்த வேளைகளில், கடவுளின் உடனிருப்பு நம்மை விட்டகன்றதை நான் உணர்ந்ததில்லையா? உண்டுபண்ணின வரையே உதறிவிட்டு வாழும் வாழ்க்கையில் உருவாகும் விளக்கவியலா வெற்றுணர்வை புரிந்து கொள்கிறார்— உணர்வுப்பூர்வமாகவே! ஒவ்வொருநாளும் உயிருள்ள உறவுகொள்ளும் ஆவலோடு அவரிடம் வந்தால், இதயத்தின் வெற்றிடங்கள் என்றென்றும் நிரப்பப்படும்(யோ 4:13, 14;10:10).

7 நம்மைப்போலவே களைப்புற்றார்!

   நீண்ட நடைப்பயணத்தால் களைத்துப் போனார். ஆகவேதான்,  மூச்சுவாங்க தாகம் தீர்க்க சமாரியாவின் கிணற்றருகே சற்று நின்றார்(யோ 4:6). இன்றைக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்றால் ஒருவேளை ஏதேனுமொரு குளிர்பானக் கடையில் நின்று ‘கோலா’ குடித்திருக்கலாம். அனலளவு ஐம்பதைத் தொடும் அக்கினி வெயிலில், நின்று நாம் தாகத்தோடு ஒரு ‘கோக்’ அடிப்பதைக்கூட இயேசுவால் புரிந்து கொள்ள முடியும்.

   40 நாட்கள் பாலைவனத்தில் பட்டினியிருந்தபின் கார்ல் லூயிஸுடன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போட்டியிடும்படியாய், உற்சாகத்துடனா இயேசு இருந்தார்? இல்லை! களைப்பு அவரைக் கட்டியிருந்தது(மத் 4:11). கடின ஊழியம் நிறைந்த நாளின் இறுதியில் கட்டைபோல் உறங்கினார். புயலும் கூட அவரைப் புரட்டமுடியவில்லை; அத்தனை களைப்பு(மத் 8:24). சீடர்கள் அவர்மேல் விழுந்து புரட்டிஎழுப்ப வேண்டியதாயிற்று.

    பின்னிரவுவரை விழித்துப் படித்ததினால் களைத்துக் காலையில் ஒரு மணி நேரம் அதிகம் உறங்கினால்,  இயேசுவுக்குப் புரியும்!(சிலவேளை பெற்றோர் புரிந்துகொள்ளாவிடினும்… ) சல்மான் கான் போன்ற ரோமப் படை வீரர் சரமாரியாய்ச் சாட்டை கொண்டு அடித்தபோது, இயேசு ‘மனிதர்க்காய் மரிப்பது என்னே சிலாக்கியம்!’ என மகிழ்ந்து நகைக்கவில்லை. வேதனையில் கதறினார். 39 அடிகளில் எவ்வளவாய்த் துவண்டுபோனார் என்றால், 50 கிலோ சிலுவையைச் சுமப்பதற்குக்கூடச் சைமனின் உதவி வேண்டியதாயிருந்தது. 7 அங்குல ஆணிகள் கை கால்களைத் துளைத்த போதும், மெய் வேதனையில் உடல் முறுக்கினார்.

  கடினமான தெரு ஊழியத்தில் காய்ந்துபோய், கொஞ்சம் அமர்ந்து மூச்சு வாங்கிக் கொள்ளலாமா என நீ நினைக்கும் வேளையில், உன் உணர்வைப் புரிந்துகொள்ளும் ஒருவர் இந்த இயேசு. அவ்வேளையில், “நம் ஓய்வு பரத்தில் தான்; நடங்கள் அடுத்த தெருவுக்கு” என நிச்சயமாய்ப் பிரசங்கிக்க மாட்டார் (சில அதீதப் பரிசுத்தர்கள் செய்வது போல). நம்மை உணர்வில்லா வார்த்தை கொண்டு உடைக்க மாட்டார்.

8.நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார்!

   இயேசுவும் நம்மைப்போல் எல்லாவற்றிலும் சோதிக்கபட்டதாக வேதம் (எபி 4:15) சொல்கிறது. இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. வனாந்தர சோதனைக்குப்பின் ‘சில காலமே’ சாத்தான் இயேசுவை விட்டு வைத்தானாம்(மத் 4:11). வாழ்நாள் முழுவதும் சோதனையே! அவரது எல்லாச் சோதனைகளையும் எழுத்தில் பதிக்காவிட்டாலும், அவர் ‘எல்லாவற்றிலும்’ சோதிக்கப்பட்டார் என எழுத்து பதிந்துள்ளது. சிலுவையைத் தள்ளிவிடும்படிதான் எத்தனை விதத்தில் சோதனை! சீடன் பேதுருவின் ‘ஆலோசனை,’ மன்னனாகிய விரும்பிய மக்களின் ‘ஆசை,’ மற்றும் சிலுவையில் தொங்கும் வேளையிலும், ‘நீ தேவகுமாரனானால் இறங்கி வாயேன்’ என ‘ஆகடியம்’ —- எல்லாவிதச் சோதனையையும் தாண்டித்தான் சிலுவையில் சிரம் சாய்த்தார், செஞ்சிலுவைக் கோமான்.

   ‘பாவத்துடன் எனக்குள்ள உள்மனப் போராட்டம் எவரறிவர்?’ எனப் புலம்பல் வேண்டாம்; இயேசு அறிவார். அதிலும் மேன்மையான செய்தி: ‘அவர் விளங்கிக் கொள்வது மட்டுமல்ல; வெற்றி பெறவும் உதவி செய்வார்’. நமது போராட்டங்களில் நமக்காய் அவர் மனமிரங்குவார்(எபி 4:15). இவ்வசனத்திற்கு முன்பு வரும் வார்த்தைகள்: “அவரது பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை. யாருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தனவாகவும் உள்ளன”(வச 13). ஹலோ! இந்த வசனம் பயப்படுத்துகிறதா உன்னை? பயமுறுத்த இவ்வசனம் எழுதப்படவில்லை. இவ்வசனம் இருக்கிற சூழலைக்  கவனிப்பின் இதன் அர்த்தம் இதுதான்: “நீ கால் வைக்கும் போர்க்களங்கள் கடவுள் அறிவார். அனைத்தும் அறிவார். பின் ஏன் அவரை விட்டு அகல முயலுகிறாய்? அவரை நோக்கி ஓடு; அவரின் திறந்த கரங்களில் அடைக்கலம் கொள்; அங்கே, அன்பும் அருளும் உன்னை அணைக்கக்  காத்திருக்கிறதே, அன்புக் குழந்தாய்?” இந்த விளக்கம் எங்ஙனம் பயின்றேன்? கொஞ்சம் கீழே வந்து வசனங்கள்14, 16ஐ வாசித்துப்பார்: “ ஆகவே, இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக் குருவாகப்  பெற்றுள்ள நாம்… தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறையருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக!”

   உனது முதற்குற்றத்திற்கே உன்னை ‘நொறுக்கி’ விடக் கசையோடு காத்திருக்கும் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல இயேசு! அவரது இயல்பே தனி. மறுபடியும், மாக்ஸ் லுக்காடோவைக் கேட்போம்: “ வானக வாசலை அடைத்து விட அல்ல, வானக வழிகளைத் திறப்பதற்கே ஆண்டவர் அநேக வழிமுறைகளைத் தேடி அலைகிறார். கடவுளின் இரக்கத்தை நாடிக் காத்திருந்து, அதனைக் கண்டடையாத ஓர் ஆன்மாவையேனும் எனக்குக்  காண்பிக்க முடியுமா? காகிதங்களைத் திருப்பிப் பார்; கதைகளைப் படித்துப் பார்; உன்னோடு பழகியவர்களை உன் கண் முன் நிறுத்திப் பார்; இரக்கம் பெற இரண்டாம் சந்தர்ப்பம் கேட்டு இறைவனிடம் சென்று, ஏமாந்து, ஓர் இறுக்கமான பிரசங்கம் மட்டும் பெற்றுத் திரும்பிய ஏதேனும் ஓர்— ஒரேயொரு— ஆன்மாவை எனக்குக் காட்ட இயலுமா? தேடிப்பார், சவால்!” நாம் கால்பதிக்கும் இடமெல்லாம் அவரின் கால் தடமும் உண்டு; எனினும், அவர் பாவம் செய்யவில்லை. ஆகவே, அவர் உதவிக்கரம் நீட்டுவார். அவர் கரங்கள் மட்டுமே மறுபடியும் நாம் பாவக் குழியில் விழாதபடிக் காக்க வல்லவை.

   இதைவிட என்ன வேண்டும் உனக்கு, என் நண்பா?

9. நம்மைப்போலவே வாழ்வை முடித்தார்!

   இறப்பே எல்லா மனிதரின் இறுதியிலக்கும்.கேள்வியின்றி, ஐயமின்றி ஏற்றுக்கொள்ளும் உண்மை இது. வேதமும் அவ்வாறே சொல்கிறது. தாவீதரசர் மரணமடையும் தருவாயில் மகன் சாலமோனை அழைத்துச் செல்கிறார்: “ மகனே! எல்லோரையும் போல் நானும் இறக்கும் காலம் வந்துவிட்டது”(1 இரா 2:2). இதுதான் மனுக்குலத்தின் இறுதி எதிரி(1 கொரி 15:26).

   உங்களுக்கொன்று தெரியுமா? இயேசுவும் மனிதன் சென்ற எல்லா வழிகளிலும்— மரணம் உட்பட— சென்று, சொன்னார்: “ஹே! நீ கடந்து போகிற எல்லா அனுபவங்களும் எனக்கும் புரியும்!” மரணத்தின் மூலமாக மானிட இயல்பை முழுவதும் பகிர்ந்துகொண்டார்(எபி 2:14). இறவாத்  தன்மையுள்ள இறைவன் இறப்பதெப்படி? நல்ல கேள்விதான். ஆனால்,  அவர் விரும்பினால் எதுவும் செய்ய இயலும். அதைத்தான் இயேசுவும் செய்தார். அவரே விரும்பி மரணத்தைத் தழுவிக்கொண்டார்(யோ 10:17, 18). அவர் சிலுவையில் மரித்தார். வழக்கமாய், சிலுவையில் தொங்குவோரின் கால்களை உரோமைச் சேவகர் முறித்துவிடுவர்— அவர்கள் உன்னி, மூச்சுவிட இயலாதபடி! ஆனால், இயேசுவின் கால்களை முறிக்கவில்லை; ஏன்? அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதில் அவர்கள் அவ்வளவு உறுதியாயிருந்தனர். மரணத்தைத் தழுவ இயேசு தயங்கவே இல்லை.

   இளைஞர்கள்—பெரும்பான்மையோர்— மரணத்தை நினைத்து மருளுகின்றனர். டச்சு தேசத்து கால்பந்தாட்ட வீரன் டென்னிஸ் பெர்க்காம்ப் விமானத்தில் பறப்பதையே விட்டுவிட்டாராம். காரணம், தனது சக வீரர்கள் சிலர் இறந்து விட்ட விமான விபத்து அவர் உள்ளத்தில் ஓயாது உறுத்தும் பயத்தை விதைத்து விட்டது. இளம் நண்பா! உன் பயத்தை இயேசு அறிவார். உண்மையில், சாவுக்கு அஞ்சியதால் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருப்போரை(எபி 2:15) விடுவிக்குமாறு அவர் மரித்தும் உயிரோடிருக்கிறார்.

10. நம்மைப்போலவே நித்தியமாய் இருப்பார்!

   இத்தோடு முடிந்தபாடில்லை; இன்னுமோர் உண்மை மிஞ்சியுள்ளது. மரணத்துக்குப் பின்னும், அவருக்கு ஓர் உடல் உண்டு (அது மகிமை யடைந்த உடல்). அந்த உடலைக் கொண்டு உண்ண முடியும்(யோ 21:10;லூக் 24:49). பரத்திற்கும் மனிதனாகவே சென்றார்(அப் 1:11). இன்றும், கடவுளிடம் மனித வக்கீலாகவே நம் சார்பில் பேசிக்கொண்டிருக்கிறார்(1 தீமோ 2:5). அதே மனிதர் ஒரு நாள் திரும்பி வரப்போகிறார்(அப் 1:11). மனிதராகிய கிறிஸ்துவே எல்லா மனிதரையும் தீர்ப்பிடுவார் எனக் கடவுளின் வார்த்தை சொல்கிறது(அப் 17:31). ஆகவே அந்தப் பயங்கரமான நாளில் அவரிடம் சென்று, “இயேசுவே, மனிதனாய் நான் பட்ட பாடுகள் உமக்கென்ன தெரியும்?” என்றெல்லாம் கதைவிட முடியாது. உனது, எனது நியாயத்  தீர்ப்பாளர் ஒரு மனிதரே!

   இயேசு மனிதனாயிருக்கவில்லை என்று சாதிப்போமேயானால், நாம் அந்திக்கிறிஸ்துவாகிவிடுவோம். வேதம் இதைக்குறித்து அறுதியிட்டுப்  பேசுகிறது(யூதா 1:3; 1 யோ 4:1, 2). என் தோழா! அவர் உன்னைப் புரிந்து கொள்கிறார் என்பதை நீ புரிந்துகொள்கிறாயா? “என் முழு வாழ்விலும் ஒரு நண்பன் கூட எனக்கில்லை” என்ற மைக் டைசனின் ஏக்கம் நிறை வார்த்தைகளை உச்சரிக்கும் அவலம் நமக்கில்லை. உன்னை விட்டு யார் நகர்ந்திடினும், உன்னோடிருந்து உன்னைப் புரிந்துகொள்ளும் இயேசுவின் மார்பில் நீ என்றும் சாய்ந்துகொள்ளலாம்.

   ஒரு பிரபலப் பாடலின் கீழ்க்கண்ட வரிகளை என்னோடு பாடுவாயா? —

There’s not a friend like the lowly Jesus,

No not one, no not one!

Jesus knows all about our struggles;

He will guide till the day is done.

There’s not a friend like the lowly Jesus,

No not one, no not one!

[Rev.Dr.டியூக் ஜெயராஜ், இக்கட்டுரையின் ஆசிரியர் – பயிற்சி பெற்ற வேளாண்மை பொறியாளர்(B.Tech from SHIATS, Allahabad,India) ஆவார். தன் படிப்பிற்கேற்ற வேலையைத் தொடராவிடினும், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது வீட்டு பால்கனியில் சிறு செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்திருக்க கூடும். ஆனால் அதைவிட இக்கால தலைமுறையினருக்கு வேதத்தின் உண்மைகளை கிரிக்கெட்-ன் சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் சமகால சம்பவங்கள் மூலம் எடுத்துரைப்பதையே தெரிந்து கொண்டார். ஆண்டவரின் அழைப்பு அவரை உந்தித்தள்ளியதால், அதற்குக் கீழ்ப்படிந்து, “Grabbing the Google Generation from Gehenna Mission (G4 Mission)” என்னும் ஊழியத்தை ஆரம்பித்தார். இதற்கு முன்பாக ஒரு சர்வதேச வங்கியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி/இளைஞர் போதகர்/வேதாகமக் கல்லூரி விரிவுரையாளர்/மிஷனரி/இளைஞர் பத்திரிகை ஆசிரியர் – இப்படி பல பணிகளை ஆற்றியவர். G4 Mission – ஒரு திருச்சபை அல்ல. மாறாக இது எல்லா கிறிஸ்தவப் பிரிவினருக்குமான ஊழியம் ஆகும். 2008ம் ஆண்டு முதல், இவ்வூழியத்தில் டியூக் முழுநேர போதகராக பணியாற்றி,தான் Southern  Asia Bible College, Bangalore-ல் இருந்து பெற்ற முறையான இறையியல் பயிற்சியை(M.Div & Doctor of Ministry) உபயோகப்படுத்துகிறார்.

Dale(16) & Datasha(12),  Duke யை தந்தை எனவும், Evangeline கணவராகவும் அழைக்கின்றனர். தன் குடும்பத்துடன் Hyderabad, India-வில் வசிக்கின்றார். டியூக் தனக்கு வரும் ஊழிய அழைப்புகளை ஏற்று, பல்வேறு நாடுகளில் ஊழியத்தை செய்துவருகிறார்(பங்களாதேஷ், சிங்கப்பூர், ஜெர்மனி, நேபால், ஐக்கிய அரபு நாடுகள்). இவைகளைக் கேட்டபின், உங்கள் ஆர்வம் தூண்டப்படுமாயின், நீங்கள் கீழ்காணும் இணையத்தள முகவரிகளை அணுகலாம். http://www.dukewords.com (இவரின் உரைகளை படிக்க), http://www.soundcloud.com/shoutaloud (ஆடியோ செய்திகளைக் கேட்க), http://www.youtube.com/visitduke (வீடியோ-க்களுக்கு).]

By dukewords

Duke Jeyaraj was born to missionary parents in Vellore, South India and was saved at the age of 11 and committed for ministry and received the Holy Spirit Baptism at the age of 13. God opened the door for him to preach first as a school boy at the age of 16. He is a trained Agricultural Engineer [B. Tech from SHIATS, Allahabad, India], who did not pursue a career in the line of his education but nevertheless enjoys growing cacti in the balcony of his rented Chennai flat, during his spare time! He could have been a sports commentator but prefers to wrap Bible Truth around sports magic moments and other interesting-to-Google Genners contemporary events. God’s call upon him made him utterly restless and he obeyed that call to by founding the Grabbing the Google Generation from Gehenna Mission (G4 Mission) in 2006 to finally find serenity after having served as a International Bank Customer Service Executive/Youth Pastor/Bible College Teacher/Missionary/Youth Mag Editor. G4 Mission is not a church but an inter-denominational ministry to present-day people, a ministry which Duke works full time for, as an itinerant presenter/preacher/writer-at-residence since 2008 along with his wife, putting to use the formal theological training he received from Southern Asia Bible College in Bangalore-India [M. Div - a Gold Medal performance in 2001 & Doctor of Ministry - with project on Making Disciples of Modern Young Working Professionals Among India's Google Generation, World-wide]. Several Christian publications have carried Duke's articles over the years and at present Aim Magazine (the voice of  the Evangelical Fellowship of India an umbrella body of over 65,000 Indian churches/organisations), regularly carries Duke's writings. Duke's Bible-teaching book on Sex, Love, Marriage, Porn and more called, Straight Talk, is presently available on Amazon and Google Books.  Duke has preached by invitation beyond his national borders (we are talking about nations such as Bangladesh, Singapore, Germany, Nepal and the United Arab Emirates). Duke is called a 'Reverend' by a leading denomination (even as his ministry remains indepedent and inter-church).  Duke is called ‘dad’ by Dale (now a St. Stephen's Delhi student) and Datasha (now in Class 9) and ‘hubby’ by Evangelin (the daughter of a missionary couple to Odisha who is a hospital admin grad currently studying M. A. in Biblical Studies with SAIACS Bangalore) and calls Chennai, India, his current home after living in Hyderabad till June 2021. In case your curiosity is triggered by hearing all this, you may checkout www.dukewords.com [if you are the reading plain text type], www.soundcloud.com/shoutaloud [if you are part of the audio-listening tribe] and www.youtube.com/visitduke [if you group yourself with the video-steaming generation])

Leave a Reply