Dr. டியூக் ஜெயராஜ்

டைகர் வுட்ஸ் உலகத்திலேயே பில்லியங்களில் சம்பாதித்த முதல் விளையாட்டு வீரர். கோல்ப் விளையாட்டில் 14 பட்டங்களை பெற்றவர். விளையாட்டுத் துறையில் வீரமுள்ள ஆண்மகனாக திகழ்ந்தவர், பெண்கள் விஷயத்தில் மிகவும் பெலவீனமானவர். 14 பெண்களுடன் முறைகேடான உறவு வைத்திருந்தார். இவர்களை போல வேதத்தின் மூலமாக உதாரணத்தை காட்ட வேண்டுமென்றால் மிகச்சரியானவன் சிம்சோன். ஒரு ஆண் மகனாக மிகுந்த பெலன் பெற்றவன், பெண் விஷயத்தில் பெலவீனமானவன். அதை நியா 14:1, 15:1 மற்றும் 16:4 ஆகிய வேத பகுதியை வாசித்தால் அறிந்து கொள்ளலாம்.
S – SELECTED SAMSON
சிம்சோன் தன் தாயின் கருவில் உருவாகும் முன்னே கர்த்தருடைய தூதனானவர், கர்த்தர் அவனுக்காக பெறும் திட்டத்தை வைத்திருக்கிறார் என்று கூறினார். அந்த திட்டம் என்னவென்றால் அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்(நியா 13:4) என்பதாகும். ஆம் சிம்சோன் தேவனின் திட்டத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டவன். இந்த உண்மை சிம்சோனிற்கு மட்டுமல்ல அது உனக்கும் தான் உண்மை. அதைதான் வேதமும் போதிக்கிறது. அதனால் தான் ஏசாயா எழுதுகிறார் தாயின் கர்பத்திலிருந்தது முதல் கர்த்தர் என்னை அழைக்கிறார்(ஏசாயா 49:1). இயேசு கிறிஸ்துவும் இதை உறுதிப்படுத்துகிறார். இப்பொழுதோ நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். உண்மையாக உங்களை யாரேனும் வெறுத்து தள்ளியிருக்கலாம். வெளித் தோற்றத்தின் காரணமாக தள்ளப்பட்டிருக்கலாம். உன் வறுமையின் காரணமாக நீ தள்ளப்பட்டிருக்கலாம். நீ முக்கியம் செலுத்த வேண்டிய ஒருவர் உன் சிருஷ்டிகர்– அவர் உன்னை தெரிந்து கொண்டிருக்கிறார். நீ அவரின் கண்ணின் மணியாய் இருக்கிறாய். தன் உள்ளங்கையில் உன்னை வரைந்துள்ளார்.
A – ANOINTED SAMSON
வேதாகமத்தின் மூலம் சிம்சோன் பற்றி வேறு என்ன உனக்கு தெரியும்? இரண்டாவதாக அவன் அபிஷேகிக்கப்பட்ட சிம்சோனாக இருந்தான். ஆம் அவன் பரிசுத்த ஆவியின் கொடைகளை கொண்டிருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவக்கினார் (நியா 13:25). அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல கிழித்துப் போட்டான்(நியா 14:6). நீங்கள் அறிவீர்களா, அன்று சிம்சோனிடம் இருந்த அதே ஆவியானவர், இன்று உங்களிடம் இருக்கிறார். பரிசுத்த ஆவி உங்களை ஆளும் போது, அடிமைத்தனத்தின் எந்த கட்டும்( புகைப்பிடிக்கும் அடிமைத்தனம், சீரியல் பார்க்கும் அடிமைத்தனம், வீண் பேச்சுகளுக்கு அடிமைத்தனம், T20 அடிமைத்தனம், ஆபாச இணையத்தளங்களை பார்க்கும் அடிமைத்தனம்) உங்களை கட்டி வைக்க முடியாது. அவைகள் முறிந்தோடும்(கலாத்தியர் 5:16-25) வாசியுங்கள்.
சில சமயங்களில் சிம்சோன் தன் அவயங்களை அசுத் தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததை காண்கிறோம். அவன் தெலீலாளிடம் பொய்கள் கூறினான்(நியா 16:6). தன் மனைவி அல்லாத ஒரு ஸ்திரீயிடம் சென்றான்(நியா 16:1). ஆனாலும் அவனால் தன்னிடம் இருக்கும் ஆவியின் வல்லமையால் அற்புதங்களை எப்பொழுதும் போல செய்ய முடிந்தது. (நியா 15:14). இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் ஒருவர் ஆவியின் கனிகள் இல்லாமலே, ஆவியின் வரங்களை வெளிக்காட்ட முடியும். ஆவியின் கனிகளில் ஒன்று இச்சை அடக்கம்(கலா 5:22). ஆனால் சிம்சோனுக்கும் இச்சையடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஆவியின் கனிகளை(அன்பு, சந்தோஷம், சமாதானம்…) தெளிவாக காட்டுகிறீர்களா? ஆவியின் வரங்களையும் வெளிக்காட்ட ஆவலுடன் விரும்புங்கள். அன்பை நாடுங்கள் ஞான வரங்களையும் விரும்புங்கள் என்று பவுல் எழுதுகிறார்(1 கொரி 14:1). ஆவியின் கனிகளும் ஆவியின் வரங்களும் இரண்டுமே முக்கியம்.
M – MARRIED SAMSON
சிம்சோனின் திருமணத்தைக் குறித்து வேதம் அக்கறையுண்டாக்கும் விவரங்களை வெளிப்படுத்துகிறது. அவன் தேவனுக்கு எதிரிகளான பெலிஸ்தியர் ஜாதியான ஒரு பெண்ணை பார்த்தான். அவளுடைய தோற்றத்திற்கு அப்பால் அவன் பார்க்கவில்லை. தன் தந்தையிடம் சென்று அந்த அழகிய பெலிஸ்திய பெண்ணை தான் மணக்க வேண்டும் என்று கூறினான். அவனுடைய தந்தை சம்மதிக்கும் வரை பிடிவாதமாக ஒத்தக்காலில் நின்றான். அவன் தன் தகப்பனிடம் கூறியது அவள் என் கண்களுக்கு பிரியமானவள். அவளையே எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.(நியா 14:3). சிம்சோன் செய்தது தேவனின் பார்வைக்கு ஏற்றதாயிருக்கவில்லை(அது முடிவாக பெலிஸ்தியர்களை அழிக்க தேவனின் திட்டமாக இருந்தாலும் கூட)(நியா 14:4). நியாயாதிபதிகள் புத்தகத்தில் ஜனங்கள் மறுபடியும் பல கொடூரமான செயல்களை செய்து வருகிறதை நாம் படிக்கின்றோம். அவர்கள் தங்கள் பார்வைக்கு நலமானபடியெல்லாம் செய்தார்கள். (நியா 17:6, 18:1, 19:1, 21:25).
அதுபோல சிம்சோன் விருத்தசேதனம் அல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். அது தேவனின் பார்வைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. தன் வாழ்க்கையை நரகமாக்க கூடிய ஒரு பெலிஸ்திய பெண்ணை திருமணம் செய்ய அவன் பிடிவாதமாக இருந்தான். உண்மையாகவே, சிம்சோனின் வாழ்க்கை நரகம் போன்று கொடியதாய் மாறியது. அவன் பிடிவாதமாக இருந்தான். அவன் மனைவி குற்றம் கண்டு வசை கூறும் பெண்ணாக இருந்தாள்(நியா 14:17). இன்று நாம் எப்படி இருக்கிறோம்? அழகு, திறமை உள்ள வாழ்க்கை துணை வேண்டும் என்று தேவனை அறியாதவரை தேர்ந்தெடுக்கிறோமா? சிம்சோனின் வரலாறை நினைவு கூறுவோம். சாலமோன் ஞானியாய் இருந்தாலும், தேவனை விசுவாசியாத அவன் மனைவிகள் அந்நிய விக்கிரகங்களை வணங்கும்படி அவன் மனதை மாற்ற முயன்றனர். ஆகாபை நினைவுகூறுவோம். அந்நிய தெய்வமாகிய பாகாலை வணங்கிய அவன் மனைவியினால் தேவனுடைய ஜனங்களை பாகாலின் தீர்க்கதரிசிகள் மேற்கொள்ள முயன்றனர். இதைதான் பவுல் தேவனுடைய கட்டளையாய் கூறிகிறதாவது, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக(2 கொரி 6:14). தேவனை விசுவாசிக்கும் பிள்ளைகள் திருமணத்தில் இணைக்கப்பட்டால், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை வேத வாக்கியத்தின் படி நடந்து சரி செய்து கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கை துணையில் ஒருவர் தேவ பிள்ளையாய் இல்லாத பட்சத்தில் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இவற்றை அறிந்து நடந்து கொள்ளுவோம்.
S – SEXUALLY IMMORAL SAMSON
சிம்சோன் முதலாவது பெலிஸ்தரில் ஒரு பெண்ணை கண்டு, அவளை விவாகம் செய்ய மனதாய் இருந்தான். இரண்டாவதாக ஒரு பெண்ணை கண்டு, அவள் வேசி என்று அறிந்திருந்தும் அவளோடு பாவமான இரவை செலவிட்டான். (நியா 16:1). இவன் விரும்பிய முதல் பெண்ணை விவாகம் செய்யும் வரை பொறுத்திருந்து, அவளோடு உடல் ரீதியாக எந்த தொடர்பும் மேற்கொள்ளாதவன், வேசியை கண்டு பொறுத்திருக்க கூடாமற்போயிற்று. சிம்சோன் செய்தது பாவம். அந்த பாவத்தின் பலனையும் அவன் பெற்றுக்கொண்டான். பெலிஸ்திய வேசியோடே யாருக்கும் தெரியாமல் இருந்து விட்டு இரகசியமாய் வெளியேற நினைத்தான். ஆனால் அந்த செய்தி தலைப்புச் செய்தியாய் மாறியது.பெலிஸ்தியர் அதை அறிந்து அவனை கொலை செய்ய வகை தேடினார்கள்.
சிம்சோனை போல் மறைவான பாவத்தில் வாழ்கிறீர்களா? அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை… அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். (எபி 4:13). மறைவான பாவத்தில் இருந்து வெளிவர இரண்டு வழிகள் உண்டு. கிறிஸ்துவுக்கு முன்பாக நம் பாவத்தை வெளிப்படுத்தி மனந்திரும்புவது. அல்லது நம் பாவத்தை மூடி மகா நியாயத்தீர்ப்பின் நாளில் கிறிஸ்து அதை வெளிப்படுத்துவது. எதை தேர்ந்தெடுக்க ஆயத்தமாக இருக்கிறோம் என்று சிந்திப்போம்.ஆண், பெண் நட்புறவில் தொட்டுப்பழகுவது தவறு அல்ல அது ஆபத்தானது. அதைத்தான் நீதி 7வது அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஒரு வாலிபன் எப்படி தொடுவதில் ஆரம்பித்து ஒரு ஸ்திரீயின் படுக்கை அறை வரை சென்றான் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். தவறாய் பழகுவோமானால் இப்பொழுதே மனந்திரும்புவோம். கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க வல்லது. எனவே அவரிடம் அறிக்கை செய்வோம். சிம்சோன் தன் கண்களினாலே இச்சித்து பாவம் செய்தான், அதினால்தான் அவன் கண்களை இழக்க நேரிட்டது. மனந்திரும்பாவிட்டால் நிச்சயம் தண்டனை உண்டு, அது நம் மரணத்திற்கு முன்பு நேரிடலாம். இல்லையென்றால் மரணத்திற்குப் பின்பு நியாயத்தீர்ப்பிலே பெறலாம். எனவே நம்முடைய வாழ்விலே கவனமாய் செயல்படுவோம்.
O – OUT OF THE WORLD SAMSON
சிம்சோன் அநேக காரியங்களில் உலகரீதியாகவே நடந்துகொண்டான். உதாரணத்திற்கு ஒரு சிறிய கழுதையின் தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றான்(நியா 15:15). அதன் பிறகு மிகவும் தாகமடைந்து மயங்கி விழும் நிலையில் தேவனை நோக்கி விண்ணப்பித்தான். தேவன் அவன் ஜெபத்தை ஏற்று நிலத்தைப் பிளந்து நீர் ஊற்றை ஏற்படுத்தி அவன் தாகத்தை தீர்த்தார்(நியா 15:19). ஆனால் அற்புதத்தை பெற்றுக்கொண்ட பின்பு நாம் எப்படி வாழவேண்டும் என்பது மிக முக்கியமானது. தேவன் செய்த அற்புதத்தை கண்டு, ஊற்றுத் தண்ணீரை குடித்த சிம்சோன் தன் உடல் இச்சித்த தாகத்தை நிறைவேற்ற அன்று இரவே ஒரு வேசியை நோக்கி சென்றான். (நியா 15:19, 16:1). தேவன் அவனை விட்டு சென்றார். அதையும் அறியாதவனாய் இருந்தான். இந்நிலை மிகவும் ஆபத்தானது. சிம்சோன் இறுதியில் உலகத்தில் நடைபெறாத ஒன்று நடக்கும்படி ஜெபித்தான். கடைசியாக ஒரே ஒரு முறை தேவன் தன்னை பெலப்படுத்தினால், தன் கைகளினாலே அரண்மனையின் தூணைத் தள்ளி பெலிஸ்தியர்களை அழிப்பேன் என்று ஜெபித்தான்.(நியா 16:28). ஆனால் அவன் ஈடுபடும் அந்த செயலில் தானும் மடிய நேரிடும் என்று அறிந்திருந்தும், தேவனுக்காய் அதை செய்யவும் துணிந்தான். இதுவரை மாம்ச எண்ணத்தை நிறைவேற்றியவன் தேவனுடைய விருப்பம் நிறைவேற பிரியப்பட்டான். என்ன ஒரு மாற்றம்.
சிம்சோன் மரிக்கும் நேரத்தில் தேவ சித்தத்தை நிறைவேற்றி விசுவாசிகளின் பட்டியலில் இடம் பெற்றான். அவன் மனந்திரும்ப கிடைத்த அந்த ஒரு நிமிடம் நம் வாழ்விலே கிடைக்காமல் போகலாம். சிம்சோனை போல நம் பெயரை பரலோகத்தில் எழுதப்பட பிரியப்படுவோம் (லூக் 10:20). ஜீவ புத்தகத்தில் நம் பெயர் காணப்படாத பட்சத்தில் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளுண்டு போவோம்(வெளி 20:15).
N – NAZIRITE SAMSON
சிம்சோன் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நசரேயனாய் இருக்க தேவனால் அழைக்கப்பட்டான்(நியா 13:5). வேதத்தின்படி நசரேயன் என்றால் என்ன? (எண் 6:1-21) தேவனுக்கென்று பரிசுத்தமாய் வாழ தன்னை பிரித்தெடுப்பவன் தான் நசரேயன். ஒரு நசரேயன் திராட்சைரசம் அருந்தக்கூடாது, தலைமுடியை வெட்டக்கூடாது, உயிரிழந்த பிணத்தை தொடக்கூடாது. (எண் 6:3-8). நசரேயன் ஏன் இந்த வாக்குறுதியை பின்பற்ற வேண்டும்? அதை சற்று விவரமாய் காண்போம்.
திராட்சை ரசம் அருந்தாவிட்டால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தேவனை சகல ஞானத்தோடும் நிதானத்தோடும் சேவிக்க முடியும். தலை முடியை வெட்டாமல் இருந்தால் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் நேரத்தையும் சேமித்து தேவனை சேவிப்பார்கள். எனவே நசரேயத்துவத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பெரும்பாலான நேரத்தை தேவனுக்கென்று வாழ்நாள் முழுவதும் செலவிடுவது.
நசரேயனான சிம்சோன் விருந்துக்கு அழைக்கப்பட்டு திராட்சை ரசத்தை அருந்தினான்(நியா 14:10). விருந்திலே நிச்சயமாய் திராட்சைரசம் பரிமாறப்படும். நசரேயன் உயிரற்றதை தொடக்கூடாது. ஆனால் சிம்சோன் இறந்த சிங்கத்தின் வாயில் இருந்து தேனை எடுத்து ருசித்தான் (நியா 14:6-9). இறந்த கழுதையின் தாடை எலும்பை எடுத்து ஆயுதமாக பயன்படுத்தினான்.(நியா 15:15). நசரேய விரதத்தை காக்க மிகவும் எளிதான விஷயத்தை மாத்திரம் சிலநாள் கடைபிடித்தான். அதாவது தலைமுடியில் சவரக கத்தி படாமல் பார்த்துக்கொண்டான்.
நாமும் சிம்சோனைப்போல் அநேக காரியங்களை செய்கிறோம். தேவன் நமக்கு கொடுத்த கட்டளைகளில் பிரியமானதை மட்டும் ஏற்று அதன்படி நடப்போம்.நமக்கு பிடிக்காததை, செய்ய மனதில்லாததை ஏற்பதில்லை. சரீரத்தின் படி நாம் எந்த பாவமும் செய்வதில்லை.ஆனால் மனதளவில் அதை சிந்தித்தாலும் பாவம் தான் என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 5:28 ல் குறிப்பிடுகிறார்.
சில வேளை நாம் தவறான வார்த்தையை பயன்படுத்தாதவராய் இருக்கலாம். ஆனால் தேவனுக்கு விருப்பமில்லாத பொய்யை பேசுகிறோம். தவறான வார்த்தையை பேசுவதோ அல்லது பொய் பேசுவதோ இரண்டுமே தேவனுக்கு பிரியமில்லாதது தான். பலர் மிஷனரி ஊழியத்தை ஜெபத்தினாலும் காணிக்கையினாலும் தாங்கலாம். ஆனால் தேவனுடைய அழைப்பை உணராமல் உலக வாழ்வை விட மனதில்லாமல் ஊழியத்திற்கு வருவதில்லை. நாமம் சிம்சோனை போல் நம்மால் செய்ய இயன்றதை மட்டும் தேவனுக்காய் செய்ய முன் வருகிறோம். நம்மை முழுமையாய் அவருக்கு அர்ப்பணித்தால் அதன் பலனை முழுமையாய் நமக்குத் தருவார். அரைகுறை அர்ப்பணிப்புக்கு பாதி பலனை தருகிறவரல்ல நம் தேவன். இப்படியாய் முழுமையான அர்ப்பணிப்பை குறித்து எழுதியிருக்கிறார் பில்லி கிரகம்.
Tamil translation of this Duke article by the FMPB Youth Wing
Rev.Dr.டியூக் ஜெயராஜ், இக்கட்டுரையின் ஆசிரியர் – பயிற்சி பெற்ற வேளாண்மை பொறியாளர்(B.Tech from SHIATS, Allahabad,India) ஆவார். தன் படிப்பிற்கேற்ற வேலையைத் தொடராவிடினும், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது வீட்டு பால்கனியில் சிறு செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்திருக்க கூடும். ஆனால் அதைவிட இக்கால தலைமுறையினருக்கு வேதத்தின் உண்மைகளை கிரிக்கெட்-ன் சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் சமகால சம்பவங்கள் மூலம் எடுத்துரைப்பதையே தெரிந்து கொண்டார். ஆண்டவரின் அழைப்பு அவரை உந்தித்தள்ளியதால், அதற்குக் கீழ்ப்படிந்து, “Grabbing the Google Generation from Gehenna Mission (G4 Mission)” என்னும் ஊழியத்தை ஆரம்பித்தார். இதற்கு முன்பாக ஒரு சர்வதேச வங்கியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி/இளைஞர் போதகர்/வேதாகமக் கல்லூரி விரிவுரையாளர்/மிஷனரி/இளைஞர் பத்திரிகை ஆசிரியர் – இப்படி பல பணிகளை ஆற்றியவர். G4 Mission – ஒரு திருச்சபை அல்ல. மாறாக இது எல்லா கிறிஸ்தவப் பிரிவினருக்குமான ஊழியம் ஆகும். 2008ம் ஆண்டு முதல், இவ்வூழியத்தில் டியூக் முழுநேர போதகராக பணியாற்றி,தான் Southern Asia Bible College, Bangalore-ல் இருந்து பெற்ற முறையான இறையியல் பயிற்சியை(M.Div & Doctor of Ministry) உபயோகப்படுத்துகிறார்.
Dale(16) & Datasha(12), Duke யை தந்தை எனவும், Evangeline கணவராகவும் அழைக்கின்றனர். தன் குடும்பத்துடன் Hyderabad, India-வில் வசிக்கின்றார். டியூக் தனக்கு வரும் ஊழிய அழைப்புகளை ஏற்று, பல்வேறு நாடுகளில் ஊழியத்தை செய்துவருகிறார்(பங்களாதேஷ், சிங்கப்பூர், ஜெர்மனி, நேபால், ஐக்கிய அரபு நாடுகள்). இவைகளைக் கேட்டபின், உங்கள் ஆர்வம் தூண்டப்படுமாயின், நீங்கள் கீழ்காணும் இணையத்தள முகவரிகளை அணுகலாம். http://www.dukewords.com(இவரின் உரைகளை படிக்க), http://www.soundcloud.com/shoutaloud(ஆடியோ செய்திகளைக் கேட்க), http://www.youtube.com/visitduke (வீடியோ-க்களுக்கு).
Duke’s தமிழ் வேதாகம வளங்களைக் காண- http://www.facebook.com/duketamizh