
டியூக் ஜெயராஜ்
வேதம் தீட்டும் எழுப்புதல் சித்திரங்களிலேயே மிகவும் பிரபலமானது எசேக்கியேலின் புத்தகத்தில் வரும் ‘ உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற’ காட்சிதான் ! அந்த உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு குறித்த வேத பகுதியில் பார்த்தவுடனே புலப்படுகின்ற சில அடிப்படை எழுப்புதல் சத்தியங்களை இங்கு காண்போம் .
- எழுப்புதலின் அவசியம்
எழுப்புதலின்றி நாம் எதுவும் செய்ய முடியாது . நமது ஆன்மீக வாழ்வில் ஓர் உண்மையான கண் திறப்பின்றி காலம் கடத்த முடியாது . நமது மத்தியில் எழுப்புதல் தேவை என்கிற உணர்வே இல்லாமல் அடிக்கடி நமது ஆன்மீகக் கண்கள் அஸ்தமித்துவிடுகின்றன . இந்தப் பகுதியில் , உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்குக்கு எசேக்கியேலைத் , தமது ஆவியால் , தேவனே வழிநடத்திச் செல்வதைப் பார்க்கலாம் ( எசேக் 37 : 1 ) . தேவன் இதற்கான எத்தனம் எடுக்கவில்லையெனில் , எசேக்கியேல் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கான வாய்ப்புகளே இல்லாமற் போயிருக்கலாம் . வேறு வார்த் தைகளில் சொல்லப்போனால் , ” எழுப்புதல் தவிர்க்க முடியாதது” என தேவனே எசேக்கியேலிடம் சொன்னார் . ‘மிகுதியாய்க் கிடந்த எலும்புகள் ‘ என்கிற தொடர், பாபிலோனியச் சிறையிருப்பின் கீழிருந்த மொத்த யூத குலமும் ஆவியில் அனலின்றி வாழ்ந்தது என்பதைக் குறிக்கிறது ( வ 2 ) . இன்றைக்கும் , அதே நிலைதான். உணர்கிறார்களோ , இல்லையோ , ஒவ்வொரு கிறிஸ்த வனுக்கும் எழுப்புதல் தேவைதான் . உண்மையில், இழிவான , இரங்கத்தக்க , ஏழ்மையான , பார்வையற்ற, ஆடையற்ற நிலையிலிருந்தாலும் , ‘ நான் செல்வந்தன் ; வளம் மிக்கவன் ; எனக்குக் குறை ஒன்றுமில்லை’ எனச் சொல்லிக்கொண்ட லவோதிக்கேயா திருச்சபையினரின் வருந்தத்தக்க நிலையில்தான் ( வெளி 3:17 ) நாம் இருக்கிறோம் . இந்நிலையில் தேவன் இப்படித்தான் சொல்ல விழைகிறார் : ” அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பான நிலையில் இருக்கிற படியால் , உன்னை என் வாயினின்று உமிழ்ந்து விடுவேன் ” ( வெளி 3:16 ) . ” விண்ணில் பிறந்து , ஆவியால் இயக்கப்படும் இந்த எழுப்புதல் இல்லாத வாழ்விலேயே நாம் திருப்தி அடைவதுதான் , எழுப்புதல் வராததற்கான காரணம் என எனது தீர்க்கமான முடிவாய்ச் சொல்வேன் ” என நெற்றியடியாக லியோனார்ட் ரேவன்ஹில் முழங்கினார் . ” சின்னச் சின்ன ஆசீர்வாதங்களே நமக்கு மகிழ்ச்சியளித்துவிடுகிறது . இன்னும் அதிகமாய் ஒரு பேருந்தை நமது ஞாயிறு வேத பாடசாலைக்காய் வேண்டுவதுதான் நமது பாரமுள்ள ஜெபம் , இந்த வருட ஈஸ்டர் , கிறிஸ்துமஸ் ஆராதனைகளுக்கு எவ் வளவு பெரிய கூட்டம் தெரியுமா என்று சொல்லிக் கொள்வதுதான் ‘பெரிய சபை ‘ யெனப் பெயர் வாங்கத் துடிக்கும் சில சபையினரின் மிகப் பெரிய மகிழ்ச்சி,” என அவர் இக்கருத்தை விளக்குகிறார் . அமெரிக்காவின் பென்சகோலா ஊரிலுள்ள சபையின் போதகர் ஜான் கில்பாட்ரிக் ஒவ்வொரு மாலையிலும் தனது ஆலயத்திற்குச் சென்று , ” இன்னும் அதிகமாய் , ஆண்டவரே ! இன்னும் அதிகமாய்,…” என்று கதறிக்கொண்டி ருந்ததாக நான் வாசித்துள்ளேன் . ‘ பென்சகோலா எழுப்புதல் ‘ என பின்னர் பிரபலமடைந்த மாபெரும் எழுப்புதல் 1995 ஆம் ஆண்டு ‘ தந்தையர் தினத்தன்று ‘ வெடித்தது ; அன்றைய தினம் மட்டும் 1,22,000 பேர் இரட்சிக்கப்பட்டனர் . இந்தப் போதகர் , ‘எழுப்புதலின்றி வாழ்வில்லை’ எனத் துடிக்கும் சிலரில் ஒருவர் !
- எழுப்புதலின் ஆதாரம்
இந்தப் பகுதியில் , தேவன் எசேக்கியேலை வினவுகிறார் : “மனுபுத்திரனே ! இந்த எலும்புகள் உயிரடையுமா ? ” அதற்கு எசேக்கியேல் , அர்த்தமுள்ள பதிலொன்றை அளிக்கிறார் . ” கர்த்தராகிய ஆண்டவரே ! தேவரீர் அதை அறிவீர் ” (37:3) . ” கர்த்தராகிய ” ஆண்டவர் மனம் வைத்து , அதற்கான வல்லமையை அளித்தால்தான் எழுப்புதல் வெடிக்கும் என்கிற மாபெரும் உண்மையை எசேக்கியேல் அங்கீகரிக்கிறார் . தேவன் தமது சுவாசத்தை ஊதினால்தான் , ஆதாமைப்போல , இந்த உலர்ந்த எலும்புகளும் உயிர டைய முடியும் ( வ 5 ) . இல்லையேல் , அவை குளிர்ந்து , உயிரற்று , உலர்ந்த எலும்புகளாகவே இருக்கும் . தேவனின்றி வாழ்வதென்பது கனவில் கூட நடவாத வொன்று . தேவனே எழுப்புதலின் ஒரே ஊற்றுக்கண் . அவரது தலையசைவின்றி , உண்மை எழுப்புதல் ஒருநாளும் விடியாது . மனித முயற்சிகள் மிஞ்சி மிஞ்சி சிறு ‘சலசலப்பையே’ உண்டுபண்ண இயலும் . அந்தச் ‘சலசலப்பை’ எழுப்புதலாய் மாற்றும் சக்தி தேவனின் கரங்களுக்கே உண்டு . எழுப்புதலுக்காக ஜெபிக்க வேண்டும் , ஜெபித்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்று சொல்வதற்கான காரணம் இதுதான் . நாம் ஜெபிக்கும் போதெல்லாம் தேவனிடம் சொல்லும் செய்தி : ” எங்களால் இது இயலாது ! ” என்பதுதான் . கர்த்தராகிய இயேசு சொன்னார் . ” என்னாலன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது ‘ ( யோ 15 : 5 ) . பவுலும் இந்த உண்மையைப் புரிந்துகொண்டதால்தான் , ” “நான் நட்டேன் ; அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினார் ; தேவனே விளையச் செய்தார் ” ( 1 கொரி 3 : 6,7 ) என்று சரியாக எழுதினார் .
சங்கீதம் 126 இன் எழுப்புதல் விதி இன்றும் மாறவில்லை . ” கண்ணீரோடு விதைப்பவர்கள் பெரு மகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள் ” ( 126-5 ) . நீர்ப்பாசனக் குழாய் பீய்ச்சும் தண்ணீர் போலவே ஜெபத்தில் வடியும் கண்ணீரும் எழுப்புதல் முளைவிடுவதற்கு ஏதுவாக தரிசு நிலங்களை மிருதுவாக்கும் . ஆனால் , ஐயகோ ! ‘ கண்ணீருக்குப்’ பதிலாய்க் ‘களிப்பையும்’ ‘பாரத்தை’ விட ‘பயணத்தை’யும் விரும்பும் தலைமுறையிலல்லலா நாம் வாழ்கிறோம்! இவர்கள் , ‘நெகிழ்ச்சியில் அழுவதைப்’ பார்க்கிலும் , ‘நிகழ்ச்சிகள் அமைப்பதில்’ மிக விருப்பமுடையவர்கள் . தேவனின் ‘பாதத்தைப் பிடித்துக் கதறுவதைவிட , மைக்கைப் பிடித்துப் பாடுவதையே’ விரும்புவர்; போராடுபவர்களாக அல்ல , போதகர்களாகவே இச்சிப்பர்; ‘பாடுகளைப்’ பார்க்கிலும் ‘பகட்டை’ விரும்புவர் . ‘ எதிர்ப்பாளராய்’ இல்லாமல் ‘எழுத்தாளராய்’ இருப்பதிலேயே திருப்தி கொள்வர் ( இவ்வளவு சுவாரஸ்யமாய் இடித்துரைப்பவர் லியோனார்ட் ரேவன்ஹில் ) . ‘ உம்மில் மகிழும்படி உமது மக்களை மறுபடியும் உயிர்ப்பிக்க மாட்டரோ ? ‘ என்ற சங்கிதக்காரனின் மன்றாட்டை ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கிக் கண்ணீரோடு ஏறெடுத்தால் மட்டுமே, இதயங்களை அசைக்கும் எழுப்புதல் வன்புயலாய் வானின்று இறங்கும் . இந்த உணர்ச்சிமிகு வேண்டுதலை நமக்கெனச் சொந்தப் படுத்திக்கொண்டால் , விண்ணுலக எழுப்புதல் மண்ணுலகைத் தாக்கும் !
- எழுப்புதலின் ஊடகம்
இந்தப் பகுதியில் பார்க்கிற இன்னொரு உண்மை: எசேக்கியேல் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்து , அவரது வார்த்தையை எலும்புகளிடத்தில் பேசும்போதுதான் அவைகள் உயிரடைந்தன ( 37 4.7 ) . உண்மையில் , எசேக்கியேல் யேகோவாவின் வார்த்தைகளைப் பாபிலோனின் கேபார் நதி ண்டையிலே தெலாபீபிலே தங்கியிருந்த தேவ பிள்ளைகளுக்குப் போதிப்பதற் காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ( 1.1 ; 3:15 ) . அவர் மீண்டும் மீண்டும் அறிவித்த ஒரே செய்தி: “ மனந்திரும்பி வாழ்வடையுங்கள் ! ” ( 18:32 ) . தேவனின் மாறாத வார்த்தை- குறிப்பாய் , மனந்திரும்புதலின் செய்தி- உண்மையாய்ப் பிரசங்கிக்கப்படும்போது , அதைக் கேட்கிறவர்களுக்கு நிச்சயமாய் எழுப்புதலைக் கொண்டுவரும் ! இதுதான் எழுப்புதலைக் காண ஒரே வழி ! யோசியா ராஜாவின் காலத்தில் இதுதான் நடந்தது . கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கையின் புத்தகத்தை தன் மக்களுக்கு வாசித்துக் காண்பித்ததின் பலன்தான் , நியாயாதிபதிகளின் காலத்திலிருந்து அந் நாள் வரையிலும் எவரும் காணாத அளவில் , விமரிசையாய்க் கொண்டாடப்பட்ட பஸ்கா பண்டிகை ! ( 2 இரா 23.2.22 ) .
1741 ஆம் ஆண்டு , ஜூலை மாதம் , 8 ஆம் தேதி , அமெரிக்காவிலுள்ள என்ஃபீல்ட் எனும் இடத்தில் உள்ள ஒரு சபையிலும் இதுதான் நடந்தது . அங்கு யோனத்தான் எட்வர்ட்ஸ் , “சினங்கொண்ட தேவனின் கரங்களில் பாவிகள்” எனும் தலைப்பில் பிரசங்கித்தார் . அவர் தனது செய்தியை , பிரபலமாகாத, ஆனால் , குலை நடுங்க வைக்கும் . “ஏற்ற காலத்தில் அவர்க்ளுடைய கால் தள்ளாடும் ( உபா 32.35 ) ” என்ற வேதவசனத்தில் ஆரம்பித்து , தமது தீய வழிகளிலேயே நிலைத்திருப்பார்களானால் , இஸ்ரவேலருக்கு நேரிடும் கொடுமையை இன்னதென்று விவரித்தார் . கர்த்தரின் பயங்கரம் அவரை நிறைக்க , எட்வர்ட்ஸ் பரிசுத்த கோபத்துடன் தேவ வார்த்தையைப் பிரசங்கித்தார் . 73 ஆம் சங்கீதத்தின் அடிப்படையில் , ‘ஒரே கணத்தில்’ அழிவுக்குள் தள்ளப்படும் அபாயத்தைப் பற்றிக் கூட்டத் தினரை எச்சரித்தார் ( வச 18.19 ) . நாகூமில் மறக்கப்பட்டிருந்த ஒரு வசனத்தை எடுத்து , தேவனைப் ‘ பட்சிக்கும் அக்கினி ‘ யாக மக்கள் முன் காட்டினார் . மனந்திரும்பி கிறிஸ்துவை நம்பாதோர் யாவரும் ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என யோவான் 3 : 18 இலிருந்து விளக்கினார் . ஆதி முதல் அந்தம் வரை முழுவதும் வேதத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த தன் செய்தியால் மக்களைக் கெட்டியாகப் பின்னிய அவர் தன் பிரசங்கத்தை சுட்டுப் பொசுக்கும் வேதவசனங்களிலேயே முடித்தார் . “உங்களில் அநேகர் மேல் இப்போதே தேவ கோபம் நிழலாடுகிறது . சோதோமிலிருந்து ஓடிப்போங்கள் . ‘ உன் ஜீவன் தப்ப ஓடிப் போ , பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப் போ ! ‘ ( ஆதி 19:17 ).” வீறுகொண்ட இந்த வேதப் பிரசங்கத்திற்குப் பலன் என்ன தெரியுமா ? எட்வர்ட்ஸின் சூறாவளிச் செய்தி முடிந்தவுடனே , மக்கள் மனம் நொறுங்கினர் . பாதாளத்தின் வாய் திறந்து அப்போதே விழுங்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் சிலர் ஆலயத்தின் தூண்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டனர் . புதிய இங்கிலாந்தில் எழுப்புதல் அக்கினியை விசிறிக் கிளறி விட்டது இத்தகைய வேதத்தின் நேரடிச் செய்தி !
- எழுப்புதலுக்கான காரணம்
உலர்ந்த எலும்புகள் உயிரடைவதில் ஏன் தேவன் ஆர்வம் காட்டுகிறார்? மிக எளிதான பதில் : “அவை கள் அவரைக் கர்த்தரென்று அறியும்படியாக!” (37:6,13). எழுப்புதலின் நோக்கமே தேவனுடைய மக்கள் அவரை அறிகிற அறிவில் வளரவேண்டுமென்பதுதான் . தேவனின் ஏக்கத்தைப் பாருங்கள் : “மாடு தன் எஜமானனையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணை யையும் அறியும் , இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது” ( ஏசா 1 : 3 ) என்கிறார் . தேவனை அறிந்துகொள்வதையும் , புரிந்து கொள்வதையும் மனதார மறுத்துவிட்டபடியால் , இஸ்ரவேலர் பாலும் தேனும் ஓடும் தேசத்தைத் துறந்து எழுபது ஆண்டுகள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குள் அல்லற்படவேண்டியதாயிற்று . “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள் ( ஏசா 5:13 )” என்று தேவன் சொல்வதாக ஏசாயா எழுதிவைத்தார் . ஆகவேதான் , இப்போது பாபிலோனிய அடிமைத்தனத்தில் உழன்றுகொண்டிருக்கும் எண்ணிறந்தோரில் ஒருவரான எசேக்கியேலிடம் உலர்ந்த எலும்புகளாய் வாழும் இஸ்ரவேலர் தம்மை அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார் . நம் இதயத் தினுள்ளும் எழுப்புதல் அக்கினி கொழுந்துவிட்டு எரிகிறது என்பதற்கான அடையாளம் , தேவனை இன்னும் அதிகமாய் அறியும் தருணங்களை உள்ளம் வாஞ்சித்துத் துடிக்கும் . நடைமுறையில் , தேவனை அறிவதற்கான ஒரு வழி , அவசரமின்றி அமர்ந்திருந்து அவரது வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதே . ஏன் இவ்வாறு சொல்கிறேன் ? ‘அ றிவு ‘ என்ற வார்த்தையும் , ‘தேவனுடைய வேதம் ‘ என்ற வார்த்தையும் , ஒரே பொருளின் இரு வெளிப்பாடுகளாய் வேதத்தில் பயன் படுத்தப்படுகின்றன . எடுத்துக்காட்டாக , ” நீ ‘அறிவை’ வெறுத்தாய் , ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் ‘தேவனுடைய வேதத்தை’ மறந்தாய் , ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன் ” ( ஓசி 4.6 ) என்ற ஓசியா தீர்க்கனின் வார்த்தைகளைக் கவனியுங்கள் . தொடர்கதைகள், கிரிக்கெட் , அரசியல் நோக்குகள் இவைகளைப் பார்ப்பதற்கென தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர நமக்கு கிடைக்கிற நேரம் , வாழ்நாளெல்லாம் தொடரும் ‘தேவனை அறிகிற’ முயற்சிக்குக் கிடைக்காமல் போய்விடுவதுதான் சோகமான உண்மை. நாம் எவ்வளவாய்ப் பின்வாங்கிப் போனோம் ? நமது முன்னுரிமைப் பட்டியல் எப்படியாய் தாறுமாறாகிப்போய்விட்டது ? நமக்கு எழுப்புதல் எப்படியும் தேவை !
5. எழுப்புதலின் இலக்கு
இந்தத் தரிசனத்தின் இறுதியில் என்ன நடந்தது என எசேக்கியேல் இவ்வாறு விவரிக்கின்றார்: “எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து , காலூன்றி , மகா பெரிய சேனையாய் நின்றார்கள்” (37:10 ) . உயிர்ப்பிக்க பட்ட கூட்டத்தை ‘பார்வையாளர்கள்’ எனச் சொல்லாமல் ‘மகா பெரிய சேனை’ என்று சொல்வது ஒரு சுவாரஸ்யமான வெளிப்பாடு ! தனது தலைவனுக்காய் முன்சென்று எதிரியின் கோட்டையைப் பிடிக்கத் தீவிரிக்காத ‘சேனை’ என்னத்திற்கு? எசேக்கியேல் 37 : 10இன் செய்தி தெளிவாய்த் தெரிகிறது: ‘மற்றவர்களை உயிர்ப்பிக்கவே நாம் உயிர்ப்பிக்கப்படுகிறோம்.’ எழுப்புதல் அகில உலகையும் தழுவி , சர்வ தேசத்திலும் சபைக்கு வராதோர் , சந்திக்கப்படாதோர் மற்றும் சமுதாயப் புறக்கணிப்புக்குள்ளானோர் ஒவ்வொ வரையும் தொடவேண்டும் . எழுப்புதல் மழை இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல; மேட்டின் ‘சுற்றுப்புறத்தாருக்கும்தான் !’ ( 34:26 ) . இந்த எழுப்புதல் அத்தியாயாம் ‘ நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்’ என்கிற மிஷனரி வாக்குத்தத்தத்தோடு முடிவுறுவதைக் கவனியுங்கள் ( 37:28) . எசேக்கியேல் தீர்க்கதரிசி மனதளவில் ஒரு மிஷனரிதான் . பாபிலோனியச் சிறையிருப்பிலிருப்போர், அவர்களது தேவன் பூகோள எல்லைக்குள் பூட்டி வைக்கப்படக்கூடியவரல்ல என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என எசேக்கியேல் விரும்பினார். எருசலேமில் அவர்களோடிருந்த அதே தேவன்தான் பாபிலோனின் கேபார் நதியண்டையிலும் இருக்கிறவர் !
எழுப்புதல் அக்கினி பரவியே தீரும் ! நரிகளின் வால்களை பந்தத்தால் சிம்சோன் பற்றவைத்தபோது , அவைகள் அங்குமிங்கும் ஓடி பெலிஸ்தியரின் திராட்சைத் தோட்டங்களை நெருப்பால் நாசமாக்கின ( நியா 15 : 4,5 ) . இவ்வாறே நம் இருதயங்களிலும் எழுப்புதல் நெருப்பு பற்றிப் பிடிக்குமானால் , நாம் வாளாவிருப்போமோ ? இக்கோளத்தின் கடைசி மனிதனைக் கண்டுபிடிக்குமளவும் ஓடோடி , ஒவ்வொருவரையும் தேவனின் பண்ணைக்குள் கொண்டுவர துடிக்காமல் இருப்போமா ? தாவீதர சன் தனக்கு மீட்பின் மகிழ்ச்சியை ‘மீண்டும் தரும்படி’ ஏன் வேண்டினான் ? வெறுமனே குதித்து , குதூகலித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கவா ? அல்ல … பாதகருக்குத் தேவனது வழிகளை அறிவிக்கவே இந்தப் ‘புதுப்பித்தலை’ வேண்டினான் ( சங் 51.12,13 ) . அப்போஸ்தலர் நடபடிகள் நூலை எழுப்புதலுக்கான கையேடு எனலாம் . இந்தப் புத்தகத்தில் , அப்போஸ்தலனாகிய யாக்கோபு , ஆமோஸின் புத்தகத்திலிருந்து ‘எவ்வாறு தேவன் அனுப்பும் எழுப்புதல் , தொலைந்தவர்களைத் தேடிப் பிடிக்கும்’ என விளக்குகிறார் . தேவன் , விழுந்துபோன தாவீதின் கூடாரத்தைத் ( பின்வாங்கிய சபையின் அடையாளம் ) திரும்பக் கட்டிப் புதுப்பிக்கும்போது , புறவினத்தார் உள்ளிட்ட பூச்சக்கரம் முழுதும் ” கர்த்தரைக் கண்டு கொள்வர் ” என எருசலேம் செயற்குழுக் கூடுகையில் தெளிவாக்கினார் ( ஆமோ 9 : 11,12 , அப் 15 : 16-18 ) . அப்போஸ்தலர் தாங்கள் ‘புத்துணர்வின் காலத்தை’ அனுபவித்ததாலேயே , பிறருக்கும் அதை அறிவிக்க முடிந்தது ! ( அப் 3:19 ) . ‘உயிர்ப்பிக்கப்பட்ட’ இவர்கள் கர்த்தரின் சமூகத்தில் ஆடிப்பாடியே காலம் கழித்து விட்டார்களா ? இல்லவே இல்லை . எருசலேம் ஆலயத்தின் வெளியிலும் , சமாரியாவிலும் , பூமியின் கடைசி யெல்லை வரையிலும் நற்செய்தி அறிவிக்கும்படி பரவினர் ( அப் 1 : 8 ) . இந்தப் பகுதியின் செய்தி தெளிவானது: ” நாம் புத்துயிர் அடைந்தவுடன் , நமது சொந்த இடத்திலும் , மாநிலத்தின் மற்ற இடங்களிலும் , பிற மாநிலங்களிலும் , இறுதியாக பூமியின் கடைமுனை மட்டும் நற்செய்தியறிவிக்க முன்செல்ல வேண்டும்”. தேவை நிறைந்த பிற மாநிலங்களில் உழைக்கும்படி பணி மாற்றம் பெற்றுச் செல்வதோ , வருமானம் நிறைந்த வேலையை உதறிவிட்டு மிஷனரி இயக்கமொன்றில் தியாகத்துடன் இணைவதோ , குழந்தைகளின் இரத்த நாளங்களில் மிஷனரிக் குருதியை ஏற்றுவதோ— ஏதோவொன்றை செய்யுங்கள் ! தேவன் கிருபையாய் உங்கள் இருதயங்களில் ஊற்றின எழுப்புதல் அக்கினியை எங்கும் பரப்ப இதுவே வழி !
எசேக்கியேலின் மற்ற தரிசனங்களுக்கான தேதி ( 1 : 2 ; 8 : 1 ; 40 : 1 ) தெரிவிக்கப்பட்டது போல மிகவும் அதிகமாய்ப் பேசப்படும் இந்த ‘உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்ற’ தரிசனத்துக்குத் தேதி தெரியாமல் போனது விசித்திரமான ஒன்று ! ஒருவேளை , தேவனின் ஞானத்தில் வேண்டுமென்றே இத்தரிசனம் தேதியின்றிப் போனதுக்குக் காரணம் , ” உன் காலத்தில் காணும் உலர்ந்த எலும்புகளும் உயிர்ப்பிக்கப்படும் ! ” என்று சொல்வதற்காகவோ … ? ஆம் , நான் அப்படித் தான் நினைக்கிறேன்!
(This article by Duke Jeyaraj was originally published in Blessing magazine years ago. Princy Erastus, our ministry’s volunteer, digitized it into Tamil. Duke is the founder of Grabbing the Google Generation from Gehenna Mission, the G4 Mission. This is a viewer supported Indian ministry. Find out more at http://www.dukev.org).